சிறுபான்மை கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
சிறுபான்மை கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
UPDATED : அக் 29, 2009 12:00 AM
ADDED : அக் 29, 2009 11:51 AM
முஸ்லிம் சிறுபான்மை கல்லூரிகள் சங்கம் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் 10க்கும் மேற்பட்டோர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில், "எங்கள் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் முதல்வரை நியமித்துள்ளோம். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, சென்னை பல்கலைக் கழகத்திற்கு மனுக்கள் அனுப்பினோம்.
பல்கலைக்கழக மானியக் குழு விதித்த தகுதியை இவர்கள் பெற்றிருக்கவில்லை எனக் கூறி, சென்னை பல்கலைக் கழகம் ஒப்புதல் வழங்கவில்லை. எங்களுக்கு இந்த நிபந்தனைகள் பொருந்தாது. எனவே, எங்கள் கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்கள், முதல்வருக்கு ஒப்புதல் வழங்க சென்னை பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரப்பட்டது.
இம்மனுவை நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் என்.ஆர்.சந்திரன், வக்கீல்கள் ஆர்.நடராஜன், ஐசக் மோகன்லால், காட்சன் உள்ளிட்டோர் ஆஜராகினர். "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த இடைக்கால உத்தரவு மனுதாரர்கள் கோரியுள்ள நிவாரணம் குறித்து, இறுதி விசாரணைக்கு பின்னரே முடிவு செய்ய முடியும். பல்கலைக் கழகத்தினால் ஒப்புதல் அளிக்கப்படாததால், 150 விரிவுரையாளர்கள் இன்னும் சம்பளம் பெற முடியவில்லை. இவர்களின் நிலையை கருத்தில் கொண்டும், கடந்த மாதம் சிண்டிகேட் நிறைவேற்றிய தீர்மானத்தை கருத்தில் கொண்டும் கீழ்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
* கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளர்கள், முதல்வர் பணி நியமனத்திற்கு ஒப்புதல் கோரிய விண்ணப்பங்களுக்கு, தற்காலிக ஒப்புதலை
பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். இந்த ஒப்புதல், ரிட் மனுக்கள் மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்.
* வழக்கில் மனுதாரர்கள் வெற்றி பெறவில்லை என்றால், வழங்கப்பட்ட சம்பளத் தொகையை, கல்வி நிறுவனங்கள் அல்லது விரிவுரையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த உத்தரவு, விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் கோரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எதிர்கால நியமனங்களுக்கு இது பொருந்தாது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
