UPDATED : ஏப் 09, 2021 12:00 AM
ADDED : ஏப் 09, 2021 06:58 AM
அண்ணா பல்கலையின் அங்கீகார இணைப்பு அந்தஸ்தில், 550க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் மற்றும், பி.ஆர்க்., கல்லுாரிகள் செயல்படுகின்றன.இந்த கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற வேண்டும்.
அதேநேரம், அண்ணா பல்கலையின் பாடத்திட்டத்தை பின்பற்றவும், தேர்வுகள் நடத்தி, பல்கலை சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கவும், அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கும், அங்கீகாரத்துக்கும் விண்ணப்பித்துள்ள கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
பல்கலையின் இணைப்பு அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ள கல்லுாரிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்ய பல்கலையில் இருந்த, பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு அனுப்பப்படும். கல்லுாரி மைதானம், நுாலகம், ஆய்வகம், வகுப்பறை வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் கல்லுாரி வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்கான, சட்ட ரீதியான அனுமதி மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
