UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM
ADDED : ஜூலை 14, 2021 01:35 PM
கோவை:
கல்வி வளர்ச்சி தினத்தை ஒட்டி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், சிறந்த மாணவர் விருது அறிவிப்பு, எப்போது வெளியிடப்படும் என்ற, எதிர்பார்ப்பு மேலேங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான வரும் 15ம் தேதி, ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. வழக்கமான பள்ளி நாட்களில், தனித்திறன் போட்டிகள் நடத்தப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தலா 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, உதவித்தொகை திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இம்மாணவர்களுக்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர், பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிப்பார்.
விளையாட்டு போட்டிகளை முன்கூட்டியே நடத்தி, வெற்றியாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டில், பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களற்ற கல்வி வளர்ச்சி தினத்திற்கு, எந்த கொண்டாட்டங்களும், ஏற்பாடு செய்யப்படவில்லை. நேரடி வகுப்புகள் இல்லாததால், சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம், போட்டிகள் அறிவித்துள்ளன.
பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகாததால், சிறந்த அரசுப்பள்ளி மாணவருக்கான விருதும், தற்போது அறிவிக்க வாய்ப்பில்லை என, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். இதனால், இவ்விருது அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
