UPDATED : ஜூலை 20, 2021 12:00 AM
ADDED : ஜூலை 20, 2021 12:58 AM
பெங்களூரு:
கடந்தாண்டு படித்த வகுப்பிலேயே நடப்பாண்டில் படிக்க மாணவர்களை அனுமதிக்க வேண்டுமென பெற்றோர், பள்ளி நிர்வாகங்களிடம் வலியுறுத்துகின்றனர். பள்ளியில் வகுப்புகள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் பலரும் கல்வி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இருப்பினும் இந்த வகுப்புகள் நுாறு சதவீதம் மாணவர்களை சென்றடையவில்லை. வகுப்புகளை கவனிக்காமல் விட்டது; நெட்வொர்க் பிரச்னை என, ஓராண்டு முடிந்து விட்டது. தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்து, மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் சில துவக்கக்கல்வி படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், கடந்தாண்டு படித்த வகுப்பையே நடப்பாண்டிலும் நடத்த வேண்டுமென பள்ளி நிர்வாகங்களை கேட்டு வருகின்றனர்.
பெற்றோர் கூறியதாவது:
கடந்தாண்டில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்த்து, ஆன்லைன் வகுப்புகளை, பாதி நாட்கள் கூட மாணவர்கள் கவனிக்கவில்லை.மீதி நாட்களில் நெட்வொர்க் பிரச்னை என ஒரு ஆண்டில் மொத்தமாகவே இரண்டு மாதம் தான் ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் படித்துள்ளனர். அடிப்படை கல்வி இவ்வாறு இருந்தால், மாணவர்களுக்கு அடுத்தடுத்த வகுப்புகள் கடினமாகிவிடும். இதனால் நடப்பாண்டில் மீண்டும் அதே வகுப்புகளை நடத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
துவக்க மற்றும் உயர்கல்வி பள்ளி மேலாண்மை சங்க செயலர் சசிகுமார் கூறியதாவது:
கடந்தாண்டில் கூட ஒரு சில பெற்றோர், அதே வகுப்பை நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
ஆனால் நடப்பாண்டில், அதிகமான பெற்றோர் கடந்தாண்டு வகுப்பை நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். அதற்கான கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்கின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி முறையாக கிடைக்கவில்லை என்ற அச்சத்தில் தான் பெற்றோர் இவ்வாறு கேட்கின்றனர். இவ்வாறு கூறினார்.
