UPDATED : டிச 02, 2009 12:00 AM
ADDED : டிச 02, 2009 05:48 PM
அ நிறம் | அளவு
இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதி வாய்ந்த மையங்களுக்கு மட்டும், வரும் 15ம் தேதிக்குள் அனுமதி வழங்கப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பள்ளி பொதுத் தேர்வுகளில், தேர்வு மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பிட்ட பள்ளியில் அதிகமான மாணவர்கள் ஆண்டு தோறும் பொதுத்தேர்வு எழுதினால், அந்த பள்ளிக்கு தேர்வு மையத்திற்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மகளிர் பள்ளியாக இருந்தால், பொதுத்தேர்வு வகுப்பில் குறைந்தபட்சம் 100 பேர் இருக்க வேண்டும். பிற பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 150ஆக இருக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவில் 50 மாணவர்கள் இருந்தால், அந்தப் பள்ளிக்கு தேர்வு மைய அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இதர, குரூப் மாணவர்களாக இருந்தால், 150 பேர் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருந்தாலும், பள்ளியின் அமைவிடம், பள்ளியின் செயல்பாடுகள் போன்ற அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகே, தேர்வு மையத்திற்கான அங்கீகாரம் தரப்படுகிறது.தேர்வு மையம் என்ற அங்கீகாரத்தைப் பெறுவதில், தனியார் பள்ளிகள் அதிக முனைப்பு காட்டுகின்றன. தேர்வு மைய அங்கீகாரம் இருந்தால், அதன் மூலம் அதிகமான மாணவர்களை சேர்க்க முடியும் என்றும், தேர்வு மைய அங்கீகாரத்தைப் பெற்றால், அது பள்ளிக்கு கவுரவமான விஷயம் என்றும் தனியார் பள்ளிகள் கருதுகின்றன.எனவே, கூடுதலாக மாணவர்களைச் சேர்த்து, தேர்வு மைய அங்கீகாரத்தை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றன. கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு, 1,738 மையங்களிலும், 10ம் வகுப்பு தேர்வு, 2,788 மையங்களிலும் நடந்தன. ஆண்டுதோறும், தலா 50 புதிய மையங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, புதிய தேர்வு மையங்கள் கேட்டு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு முடிந்தது. புதிய தேர்வு மையங்கள் கேட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், தேர்வுத்துறைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதி வாய்ந்த பள்ளிகளுக்கு மட்டும், வரும் 15ம் தேதிக்குள் தேர்வு மைய அனுமதி வழங்கப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது
குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், எச்சரிக்கையாக செயல்பட வேண்டியுள்ளது. சிலர், தவறான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தேர்வு மைய அங்கீகாரத்தை வாங்க முயற்சிப்பர். எனவே, பள்ளியின் அமைவிடம் முந்தைய ஆண்டு தேர்வுகளில் பள்ளியின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நன்றாக ஆராய்ந்த பிறகே, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.