UPDATED : டிச 07, 2009 12:00 AM
ADDED : டிச 07, 2009 02:22 PM
கோவை: தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களில்(டயட்) ஏராளமான விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, தமிழகம் முழுவதும் டிச. 6ம் தேதி (நேற்று) நடந்தது. கோவை மாவட்டத்தில் ராஜவீதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இத்தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கு மொத்தம் விண்ணப்பித்த 307 பேரில், நேற்று 277 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் விடைகள் ‘ஓ.எம்.ஆர். ஷீட்டில்’ பூர்த்தி செய்யப்பட்டன.
இதன் அடியில் இணைக்கப்பட்டுள்ள நகல் மூலம், தேர்வு முடிந்தபின் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான விடைகளையும், எத்தனை மதிப்பெண் கிடைக்கும் என்பதையும் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம். கடந்த முறை நடந்த உதவி கல்வி அலுவலர் தேர்வு முதல் தமிழகம் முழுவதும் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. நேற்று நடந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் ராஜவீதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கண்காணித்தனர்.
