UPDATED : டிச 23, 2009 12:00 AM
ADDED : டிச 23, 2009 04:44 PM
திருநெல்வேலி: நெல்லை பல்கலையில் தொலைநிலைக் கல்வி மூலம் எம்.எட். படிப்பு துவங்கப்பட உள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டம் துணைவேந்தர் சபாபதிமோகன் தலைமையில் நடந்தது. பதிவாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
துணைவேந்தர் சபாபதிமோகன் பேசுகையில், தொலைநெறிக்கல்வி மூலம் தற்போது பி.எட்.,வகுப்புகள் நடத்தப்படுகிறது. எம்.எட். படிப்பு விரைவில் துவக்கப்பட உள்ளது. என்.சி.டி.இ அனுமதிக்காக காத்திருக்கிறோம். வரும் ஆண்டில் படிப்புகள் துவக்கப்படும். கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு நமது பல்கலையின் கீழ் உள்ள 66 கல்லூரிகளின் சார்பில் அலங்கார ஊர்திகளில் நமது மாவட்டத்தின் பெருமையை விளக்கும் வண்ணம் செல்லவேண்டும் என்றார்.
சேரன்மகாதேவி எம்.எல்.ஏ., வேல்துரை பேசுகையில், மாணவர்களிடம் உடற்பயிற்சி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். கலாச்சார சீரழிவை தடுக்கும் வகையில் மாணவர்களிடம் பண்பாட்டு எண்ணங்களை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றார். ராதாபுரம் எம்.எல்.ஏ., அப்பாவு பேசுகையில், திசையன்விளையில் பல்கலையின் சார்பில் மனோ கல்லூரி துவக்கப்பட்டுள்ளதைப்போல பணகுடி, வள்ளியூரிலும் கல்லூரிகளை துவக்க முயற்சிக்க வேண்டும். கல்லூரி படித்துவெளியே வரும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிவதில்லை. அதற்கான கல்விமுறையை கற்றுத்தர வேண்டும் என்றார்.
