பார்வையற்றவர்களுக்கு புத்தகம் படித்துக் காட்டும் ‘ரோபாட்’
பார்வையற்றவர்களுக்கு புத்தகம் படித்துக் காட்டும் ‘ரோபாட்’
UPDATED : டிச 24, 2009 12:00 AM
ADDED : டிச 24, 2009 03:57 PM
கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரியில்(ஜி.சி.டி) பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஸ்ரீ ரங்கநாதன். சிறு வயது முதலே அறிவியல் தொடர்பான ஆய்வுகளில் அதிக ஆர்வமுள்ள இவர், ஜி.சி.டி., கல்லூரியில் சேர்ந்த பின்னும் தன் ஆய்வு முயற்சிகளை கைவிடவில்லை.
ரங்கநாதனின் திறமையைக் கண்டு வியந்த துறை தலைவர் லஷ்மி பிரபா, சமுதாயத்துக்கு உதவும் வகையில் ஏதாவது அறிவியல் கண்டுபிடிப்புகளை வடிவமைக்குமாறு கூறி வழிகாட்டினார். இதன் விளைவாக தனது நண்பர்கள் அனந்த கிருஷ்ணன், ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் இணைந்து புதிய நவீன ரோபாட் கருவியை ரங்கநாதன் வடிவமைத்துள்ளார்.
கம்ப்யூட்டர் உதவியுடன் செயல்படும் இந்த ரோபாட், பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வந்துள்ளது. சிறு கார் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ரோபாட்டின் முன்புறம் சக்திவாய்ந்த கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட ஆணைகள் மூலம், மனிதன் செய்யும் பல பணிகளை செய்து முடிக்கிறது.
இது பற்றி மாணவர்கள் ரங்கநாதன், அனந்த கிருஷ்ணன், ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:
சமுதாயத்துக்கு உதவும் வகையில் ரோபாட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு காரில் ரோபாட்டை பொருத்தி ஓட்டுனர் இல்லாமல் தானாக காரை இயக்க முடியும். ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள், பொருட்கள், மனிதர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தாமல் செல்ல முடியும். சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட், கார் கலர் ஆகியவற்றை அடையாளம் கண்டு பிடிக்க உதவிகரமாக இருக்கும்.
தீவிரவாதிகளால் கடத்தி மறைத்து வைக்கப்பட்டு இருப்பவர்களை தானாக சென்று கண்டுபிடிக்க உதவும். மனிதன் நுழைய முடியாத சுரங்கங்களுக்குள் நுழைய முடியும். பெரிய மருத்துவமனை, தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட துறையை கண்டுபிடித்து செல்ல சிரமப்படும் பார்வையற்றவர்கள், வயோதிகர்கள், படிக்கத் தெரியாதவர்களை, இதில் உள்ள குரல் உத்தரவு தானாக வழிகாட்டி அழைத்துச் செல்லும்.
பார்வையற்றவர்கள் தற்போது ‘பிரெய்ல்’ எனும் முறையால் புத்தகத்தை கைகளால் தடவி, தடவி படிக்கின்றனர். இந்த ரோபாட்டிடம் புத்தகத்தின் பக்கங்களை கொடுத்து விட்டால், அதை பார்வையற்றவர்களுக்கு உரக்க படித்துக் காட்டி விடும். ஆக, மனிதன் செய்யும் அனைத்து விஷயங்களையும் இந்த நவீன ரோபாட் செய்து விடுகிறது. இந்த கண்டுபிடிப்புக்கு கல்லூரி முதல்வர் சுந்தரராஜன், துறைத் தலைவர் லஷ்மி பிரபா மற்றும் ஆசிரியர்கள் நன்கு உதவினர். இவ்வாறு, மாணவர்கள் தெரிவித்தனர்.ஜி.சி.டி. கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் கூறுகையில், “இது போன்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அளிக்கும் ஊக்கம், திறமையுள்ள பிற மாணவர்களுக்கும் வழிகாட்டியாக அமையும். இந்த கண்டுபிடிப்புக்கு விரைவில் ‘பேடன்ட்’ பெற விண்ணப்பிக்கவுள்ளோம். இந்த மாடலை பெரிய அளவில் மேம்படுத்தி தங்கள் துறைகளுக்கு பயன்படுத்த விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம். மாணவர்களுக்கு நிதியுதவி அளித்தால் இந்த கண்டுபிடிப்பை பெரியளவில் மேம்படுத்த முடியும்,” என்றார்.
துறைத் தலைவர் லஷ்மி பிரபா கூறுகையில், “மூன்று மாணவர்களும் சிறந்த திறமைசாலிகள். ஊக்குவித்தால் இன்னும் பல சாதனைகள் புரிவார்கள். வசதி இல்லாததால் சிறுக, சிறுக பணம் சேர்த்து இந்த ரோபாட்டை வடிவமைத்துள்ளனர். ஆகவே அதிக காலம் தேவைப்பட்டது. பெரியளவில் பயன்பாட்டுக்கு ஏற்ப வடிவமைக்க இரண்டு லட்சம் ரூபாய் வரை தேவைப்படலாம்,” என்றார்.சாதாரண அரசுப் பள்ளியில் படித்த மாணவன் ஸ்ரீ ரங்கநாதனின் தந்தை, கோவை சாயிபாபா காலனி பகுதியில் சைக்கிளில் டீ விற்பவர். மற்ற இரு மாணவர்களின் பெற்றோரும் பெரியளவில் வருமானம் இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
