UPDATED : டிச 29, 2009 12:00 AM
ADDED : டிச 29, 2009 04:37 PM
இது தொடர்பாக மாநாட்டு ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தருமான ராசேந்திரன் தினமலர் கல்விமலருக்கு அளித்த பேட்டி: கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாடு, மூன்று காரணங்கள் அடிப்படையில் முக்கியமானது. முதலாவதாக, தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்து கிடைத்த பின்னர், நடைபெறக்கூடிய முதல் மாநாடு. இரண்டாவதாக, உலகமயமாதல் ஆன சூழ்நிலையில், தமிழ் மொழியின் தற்போதையத் தேவை தொடர்பாக ஆய்வு செய்கிற மாநாடாக இது அமைகிறது. மூன்றாவதாக, செம்மொழி காலத்தில் சொல்லப்பட்டிருக்கிற வாழ்க்கையின் அர்த்தங்கள் தற்போதைய காலத்துக்கு, எந்த அளவுக்கு பொருத்தமாகவும் தேவையாகவும் இருக்கிறது என்பது பற்றியும் ஆராய்கிறது இந்த மாநாடு. இந்த உலகத்துக்கு தத்துவ ரீதியாக நம் பங்களிப்பு உள்ளது. வாழ்க்கை நெறிமுறையிலும் நம் பங்களிப்பு உள்ளது. தமிழ் மொழியின் உன்னதங்கள், தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், உலகில் உள்ளவர்களின் தேவைக்கு ஏற்றபடியும் உள்ளது என்பதை காட்டும் வகையில் இந்த மாநாடு அமைகிறது. இதையே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். மொழி வளர வேண்டுமானால் அதற்கு தேவை இருக்க வேண்டும். எதை வளர்க்கிறோமோ அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று பொருள். தமிழ் இயற்கையாக வளர்ந்து கொண்டிருக்கிற மொழி, வளர்க்கப்பட்டு வருகிற மொழி. தேவைகள் இருக்கும் போதுதான் மொழி வளர்க்கப்படுகிறது. சங்க காலத்தில் போரைப் பற்றி தெரிந்து கொள்வதற்குத்தான் அதிக ஆர்வம் இருந்தது. அதனால்தான் அப்போது போர் மற்றும் அங்கு காதல் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றன. இதை சொல்வதற்கு தமிழ் பயன்பட்டது. அதற்காக தமிழ் வளர்க்கப்பட்டது. அதன்பின் மக்களுக்கு நீதி சொல்லப்பட்டது. அதற்கு தமிழ் தேவைப்பட்டது. அதற்காக மொழி வளர்க்கப்பட்டது. பின்னர் பக்தி இலக்கியம் என்று மொழி வளர்க்கப்பட்டது. சமயத்தால் மொழி வளர்ந்தது. மொழியால் சமயம் வளர்ந்தது. மொழி இல்லாமல் பக்தி வளர்வதற்கு வாய்ப்பு இல்லை. இன்றைய நிலையில், தமிழின் பயன்பாடு கணினியிலும் மொபைல் போனிலும்தான் உள்ளது. அதற்கு ஏற்ப நாம் தமிழை வளர்க்கிறோம். உலகிலேயே கணினி மற்றும் இணையத்தில் அதிகம் தேவைப்படும் மொழியாக தமிழ் உள்ளது. முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு செல்வோர், அவர்களுடைய தாய்மொழி சூழ்நிலையிலிருந்து விடுபட்டு செல்வதாக கருதப்பட்டது. ஆனால் இன்று இணையம் மற்றும் செயற்கைக்கோள் டிவிகளின் வளர்ச்சியால் அந்நிலை மாறியுள்ளது. தமிழின் தேவையையும் அவர்கள் விட்டுவிட முடியாது. தமிழ் மாநாட்டுக்கு ஆய்வாளர் களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்டோர் ஆய்வுச்சுருக்கும் அனுப்பியுள்ளனர். தமிழகத்தைப் பற்றி இந்தியாவைப் பற்றி ஆய்வு செய்யும் வெளிநாட்டினரும் மாநாட்டில் பங்கேற்க மிகவும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த மாநாட்டின் மூலம் தொகுக்கப்படும் அறிவுத் தகவல்கள் இணையதளத்தில் இடம்பெறும். அதன்பின் அவற்றை அச்சிட்டு நூலாக தரவிருக்கிறோம். ஆய்வு முடிவுகளை செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் கருணாநிதி விருப்பமாக உள்ளார்.பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்த்து பயன்பெறுவதற்கான கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் சேர்ந்து நடத்தப்படுகிறது. அதில் கணினியில் தமிழ் எந்த அளவில் பயன்பாட்டில் உள்ளது மற்றும் எதிர்காலத்தில் எந்த வகையில் பயன்படுத்த முடியும் என்பதை பார்க்கலாம். இவ்வாறு துணைவேந்தர் தெரிவித்தார்.
