UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM
ADDED : ஜூலை 02, 2023 07:38 AM
சென்னை:
நாளை நடக்க உள்ள, அரியர் தேர்வை எழுத, தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவியை அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, மாங்காடு அருகில் உள்ள முத்துக்குமரன் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பவர் ஐஸ்வர்யா; இரண்டாம் ஆண்டு செமஸ்டருக்கான அரியர்ஸ் தேர்வு நாளை நடக்க உள்ள நிலையில் அவருக்கு ஹால் டிக்கெட்டை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வழங்கவில்லை. இதையடுத்து தனக்கு ஹால் டிக்கெட் வழங்க எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மற்றும் கல்லுாரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா வழக்கு தொடர்ந்தார். இம்மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இதேபோன்ற வழக்கில், மாணவர்களை தேர்வு எழுத நிபந்தனைகளுடன் அனுமதித்து உத்தரவிட்டிருப்பதாகவும் அதே உத்தரவை மனுதாரருக்கும் வழங்கலாம் எனவும் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் வரும் 3ம் தேதி நடக்க உள்ள தேர்வில் மனுதாரர் பங்கேற்கலாம். இந்த தேர்வுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும். மனுதாரரிடம் தேர்வுக் கட்டணம் பெற்று, பல்கலையில் கல்லுாரி நிர்வாகம் செலுத்த வேண்டும். மனுதாரருக்கு ஹால் டிக்கெட்டை பல்கலை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
