UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM
ADDED : ஜூலை 05, 2023 10:37 AM
சென்னை:
உரிய கல்வி தகுதி இல்லாதவருக்கு முனைவர் பட்டம் வழங்கியதாக எழுந்த புகார் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பல்கலையில், தண்டபாணி என்பவர், திருவாசக பக்தி கோட்பாடு என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்ந்தார். இவருக்கு, உலகநாத நாராயணசாமி அரசு கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முருகேசன் என்பவர் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தண்டபாணி முனைவர் பட்டம் பெற்றார். அவர், உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால், அவரது முனைவர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும் என, சென்னை பல்கலைக்கு, உதவி பேராசிரியர் முருகேசன் கடிதம் எழுதினார்.அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உதவி பேராசிரியர் முருகேசன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு விசாரித்தது.இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சென்னை பல்கலை, 164 ஆண்டுகள் பழமையானது. முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்தவரின் தகுதியை சரிபார்க்க தவறியது, பல்கலையின் அக்கறையின்மையை காட்டுகிறது. தண்டபாணியின் தகுதியை ஆய்வு செய்யாமல், முனைவர் படிப்புக்கு சேர்த்தது, அதிர்ச்சி அளிக்கிறது. முனைவர் பட்டம் என்பது உச்சபட்ச கல்வி தகுதியாக கருதப்படும் நிலையில், அதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மெத்தனப்போக்குடன் இருக்கக்கூடாது. கடின உழைப்பால் பட்டம் பெறக்கூடிய முனைவர்களை சந்தேகிக்கும் வகையில், பல்கலைகள் செயல்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.எனவே, மனுதாரர் முருகேசன் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரித்து, நான்கு வாரங்களில் சென்னை பல்கலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
