UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM
ADDED : ஜூலை 06, 2023 09:10 AM
உடுமலை:
மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், திருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் வெண்கலப்பதக்கம் வென்றார்.திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, வடுகபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி - கவிதாமணி தம்பதியரின் இரண்டாவது மகன், சபரிநாதன், 17. தனியார் பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். பிறவியிலேயே இடது கையில், முழங்கைக்கு கீழ் உரிய வளர்ச்சி இல்லாத சபரிநாதன், சிலம்பம், சுருள்வாள் வீச்சில் வல்லவராக திகழ்கிறார். ஒற்றைக்கையில் சூறாவளியாக சிலம்பம் சுற்றி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இவர், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், ஒற்றை சுருள் வாள் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால், சென்னையில் நடைபெற்று வரும், ஒற்றை சுருள்வாள் போட்டியில், துணிச்சலுடன் பொதுப்பிரிவில் களமிறங்கிய சபரிநாதன், வெண்கலப்பதக்கம் வென்று சாதித்துள்ளார். பதக்கம் வென்று திரும்பிய சபரிநாதன் திருப்பரில், கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்.இது குறித்து, சபரிநாதன் கூறுகையில், எனது தந்தை விவசாயி. மடத்துக்குளத்தை சேர்ந்த வீரமணி என்பவரிடம் சிறுவயது முதலே சிலம்பம், சுருள்வாள் கற்று வருகிறேன். முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டியில் பங்கேற்று, வெண்கலம் வென்றிருப்பதை பெருமையாக கருதுகிறேன். நன்றாக படித்து, ஐ.ஏ.எஸ்., ஆகவேண்டும் என்பதே எனது லட்சியம், என்றார்.
