UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM
ADDED : ஜூலை 08, 2023 03:36 AM
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அடுத்த வாரத்தில் துவங்க உள்ளது. இதையொட்டி, சூலுார் வட்டாரத்தில், 61 மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும், தலா மூன்று பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, 13 வகையான உணவுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மைய பொறுப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஒன்றிய, மகளிர் திட்டம், பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், சூலுார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் பாலசுந்தரம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி பேசுகையில், உணவு தயாரிக்கும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். சுத்தமாகவும், சுவையாகவும் உணவு இருக்க வேண்டும், என்றார்.மகளிர் திட்ட வட்டார மேலாளர் அபிநயா பேசியதாவது:
வட்டாரத்தில் மொத்தம், 7,101 மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுளள்து. போதுமான இடவசதி, குடிநீர் மற்றும் மின் வசதி இருப்பதை பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பாத்திரங்களை சுத்தமாக கழுவி சமைக்க வேண்டும்.தலைக்கு உறை, பரிமாறும் போது கையுறை அணிந்திருப்பது அவசியம். சமைத்த உணவின் மாதிரியை கண்ணாடி குடுவையில் எடுத்து வைக்க வேண்டும். பள்ளியில் உள்ள கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் உணவை சாப்பிட்டபின், அவர் ஒப்புதல் பெறுவது அவசியம். அதற்கு பிறகு, அரைமணி நேரம் கழித்துதான் மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
