UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM
ADDED : ஜூலை 26, 2023 12:11 PM
முதல்வர் கோப்பை - 2023 விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா நேற்று, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது. அதில், 61 தங்கம், 33 வெள்ளி, 19 வெண்கல பதக்கங்கள் என, மொத்தம் 113 பதக்கங்களுடன், சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியனாக வெற்றி வாகை சூடி, முதல்வர் கோப்பையை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, 18 தங்கம், 19 வெள்ளி, 18 வெண்கலம் என, 55 பதக்கங்களுடன், செங்கல்பட்டு அணி இரண்டாம் இடத்தையும், 15 தங்கம், 13 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என, 52 பதக்கங்களுடன் கோவை அணி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.இந்த அணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின், பரிசு கோப்பைகளை வழங்கினார். சமீபத்தில் நடந்த தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக அணிக்கு, 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.பின், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளை மட்டும் மதிப்பதல்ல, நம் பண்பு. நம் நாட்டில் குக்கிராமங்களில் உள்ள திறமையான வீரர்களுக்கும், அதே மதிப்பை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், முதல்வர் கோப்பை போட்டி நடத்த திட்டமிட்டோம். அதில், நம் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பத்துடன் கிரிக்கெட், சதுரங்கம், பீச் வாலிபால் போட்டிகளையும் இணைத்தோம். இதுவரை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், அரசு ஊழியர்கள், பொது மக்கள், மாற்றுத்திறனாளிகளையும் இணைத்தோம்.இந்த போட்டிகளுக்காக, 50.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், 28.30 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக ஒற்றையர் போட்டிகளில் 1 லட்சம் ரூபாயும், குழுவுக்கு ஒன்பது லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. இன்றைய வெற்றியாளர்கள் அடுத்ததாக, தேசிய போட்டிகளில் பங்கேற்க வேண்டும். உலக அரங்கில் இந்தியா விளையாட்டில் சிறக்க வேண்டும். விளையாட்டில் பதக்கங்கள் முக்கியமல்ல; பங்கேற்பு தான் முக்கியம். வெற்றி மட்டுமே முக்கியம் அல்ல; போராடுவது தான் முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.முதல்வர் கோப்பை போட்டிகளில், சென்னை, 113; செங்கல்பட்டு, 55; திருவள்ளூர், 32; காஞ்சிபுரம், 12 என, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அணிகள், அதிகளவிலான பதக்கங்களை பெற்று, பாராட்டுகளை பெற்றுள்ளது. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, விளையாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
