வெளிநாடுகளில் படிக்கும் மாணவர் பாதுகாப்புக்கு முன்னுரிமை
வெளிநாடுகளில் படிக்கும் மாணவர் பாதுகாப்புக்கு முன்னுரிமை
UPDATED : ஜன 09, 2010 12:00 AM
ADDED : ஜன 09, 2010 06:00 PM
புதுடில்லி: ‘வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பிற்கு, இந்த அரசு முன்னுரிமை அளிக்கும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
டில்லியில், வெளிநாட்டு வாழ் இந்தியர் விழாவை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘வெளிநாட்டில் பணியாற்றும் இந்திய பணியாளர்கள் மற்றும் அங்கு கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் ஆகியோரின் பாதுகாப்பிற்கு, இந்த அரசு அதிக முன்னுரிமை அளிக்கும்’ என்றார்.
எனினும் அவர், ஆஸ்திரேலியாவில், சமீபத்தில் 21 வயது இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி, விரிவாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கூறுகையில், ‘இந்தியர்கள் மீதான தாக்குதல், இனி தொடராமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், ஆஸ்திரேலிய அரசு எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவிற்கு பணியாற்ற அல்லது படிக்க செல்பவர்கள், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.
