UPDATED : ஆக 06, 2023 12:00 AM
ADDED : ஆக 06, 2023 09:52 AM
கோவை:
பாரதியார் பல்கலையில், முதுநிலை பிரிவின் கீழ் இயற்பியல் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.பல்கலையின் கீழ் முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள், மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். கடந்த, ஜூன் 20ம் தேதி இயற்பியல் முதுநிலை பிரிவுக்கான நுழைவுத்தேர்வு, சம்பந்தப்பட்ட துறை தரப்பில் நடத்தப்பட்டது. பிற பாடங்களுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இயற்பியல் பாடத்தேர்வு முடிவுகள், ஒரு மாதம் கடந்தும் வெளியிடப்படாமல் இருந்தது.தேர்வில் பங்கேற்றவர்கள் அழைத்து கேட்ட பின்னர், தகுதி பெறாதவர்கள் குறித்த தகவலை கூறி, மாணவர் சேர்க்கை முடிந்ததாகவும் தெரிவித்தனர். பல்கலை முடிவு வெளியாகாததால், பிற கல்லுாரிகளில் சேர முடியாமல் தவித்தனர். இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து நுழைவுத்தேர்வு தரவரிசை பட்டியல், நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது .
