UPDATED : ஆக 09, 2023 12:00 AM
ADDED : ஆக 09, 2023 09:37 AM
புதுடில்லி:
தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.அரசு துறைகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் தகவல் ஆணையத்தில், ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 10 தகவல் ஆணையர்கள் செயல்படுகின்றனர். தற்போதைய தலைமை தகவல் ஆணையர் ஒய்.கே.சின்ஹா, வரும் அக்டோபரில் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, புதிய தலைமை தகவல் ஆணையரை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதன்படி, 65 வயதுக்கு உட்பட்ட, சட்டம், அறிவியல், தொழில்நுட்பம், சமூக அறிவியல், மேலாண்மை, பத்திரிகை, நிர்வாகம், அரசு துறை நிர்வாகம் ஆகியவற்றில் நிபுணத்துவம் அல்லது அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மற்றும் தனி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், விருப்பம் இருந்தால், தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை, வரும் 29ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
