டிஜிட்டல் நுாலகம் அமைத்தவருக்கு நல்லாசிரியர் விருது
டிஜிட்டல் நுாலகம் அமைத்தவருக்கு நல்லாசிரியர் விருது
UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 09:58 AM
பாலக்காடு:
நாட்டில் டிஜிட்டல் நுாலகம் அமைக்க முன்மாதிரியாக செயல்பட்ட கஞ்சிக்கோடு கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் முஜீப் ரஹ்மான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் முஜீப்ரஹ்மான் 50. நுாலக அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டமும் யு.ஜி.சி. நெட் முடித்துள்ள இவர் பள்ளியில் நுாலகராகவும் ஆசிரியராகவும் ஐ.டி. நிபுணராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.வாசிப்பை விரும்பி விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் இவர் தொழில்நுட்பம் பயன்படுத்தி வாசிப்பின் அற்புத உலகத்தை பள்ளியில் அமைத்துள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்களை வாசிப்பின் உலகிற்கு அழைத்து சென்றுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் பள்ளிக்காக இவர் வடிவமைத்த டிஜிட்டல் நுாலகம் என்ற திட்டம் நாடு முழுவதும் முன்மாதிரியாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த டிஜிட்டல் நுாலகத்தில் வீடுகளில் இருந்தே மாணவர்கள் புத்தகம் தேர்ந்தெடுக்கவும் வாசிக்கவும் முடிகிறது. இதற்க்காக இவர் சிறப்பு மொபைல் ஆப்பும் அமைத்துள்ளார். மாணவர்களின் அடையாள அட்டைகளில் க்யூஆர் கோடு தயார் செய்து அதன் வாயிலாக நுாலக உறுப்பினர் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முஜீப்ரஹ்மான் கூறியதாவது:
விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். 2003ல் சிவபுரி கேந்திரிய வித்யாலயாவில் நுாலகராக பணியில் சேர்ந்தேன். 2022ல் யுனைடெட் ஸ்டேட் கல்வி கழகத்தின் விருது இளம் நுாலகர் விருது கேந்திரிய வித்யாலயா பிராந்திய ஊக்கத்தொகை விருது கிடைத்தது. கடந்த 2015ல் கேந்திரிய வித்யாலயா தேசிய கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனை விருது 2019ல் என்.சி.இ.ஆர்.டி. தேசிய கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனை விருது ஆகியவை கிடைத்தன. இவ்வாறு அவர் கூறினார்.
