தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘தமிழை நேசிப்பவர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்’

‘தமிழை நேசிப்பவர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்’

‘தமிழை நேசிப்பவர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்’


UPDATED : ஜன 20, 2010 12:00 AM

ADDED : ஜன 20, 2010 05:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2010 12:00 AM ADDED : ஜன 20, 2010 05:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: “தமிழை நேசிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திடுவது என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று ரூட்ஸ் மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவர் கவிதாசன் பேசினார்.


கோவை வேளாண் பல்கலையில் ‘முத்தமிழ் விழா 2010‘ ஜன. 20ம் தேதி துவங்கியது. பல்கலையின் மாணவர் மன்றம் சார்பில் நடத்தப்படும் இவ்விழாவின் துவக்க நிகழ்ச்சியில், துணைவேந்தர் முருகேச பூபதி பேசியதாவது:


இயல், இசை, நாடகம் என்ற மூன்று வகையாக தமிழை வகைப்படுத்தி, சங்கம் வைத்து தாய்மொழி வளர்த்த பெருமை தமிழ் மக்களுக்கு உண்டு. கிறிஸ்துவ மதத்தை பரப்ப இத்தாலி நாட்டில் இருந்து தமிழகத்துக்கு கப்பலில் வந்த ஜோசப் பென்கி, தமிழைக் கற்று அதன் செறிவைக் கண்டு வியந்தார்.


அதன் பின் தன் பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். இது தமிழின் பெருமைக்கு சான்று. வேளாண்மை பற்றிய அரிய தகவல்கள் நமது இலக்கியங்களில் குவிந்து கிடக்கின்றன. நிலம், நீர், பயிர் வகைகள், நல்வித்து, பயிரிடும் முறைகள், பயிர் மேலாண்மை தொழில் நுட்பங்கள் பற்றிய பல செய்திகள், பண்டைய இலக்கியங்களில் பரவிக் கிடக்கின்றன.


மண்ணின் தன்மையை பொறுத்தே பயிர் விளையும் என்பதை நன்கு உணர்ந்த நமது மூதாதையர்கள், நீரின் நிறம், தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து நிலத்தின் தன்மையை அறிந்து கொண்டனர் என்ற தகவலை, நான் மணிக்கடுகை நூலில் இருந்து அறியலாம். உழுவதைக் காட்டிலும் உரமிடுதல் முக்கியம். களையெடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் முக்கியம்; அதை விட பயிர் பாதுகாப்பு முக்கியம் என்பதை, ‘ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டப்பின் நீரினும் நன்றதன் காப்பு’ என்ற குறளின் மூலம் திருவள்ளுவர் விளக்கியுள்ளார். இவ்வாறு, துணைவேந்தர் முருகேசபூபதி பேசினார்.


ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவர் கவிதாசன் பேசியதாவது:
உலகளவில் இன்று தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகள் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளன. ஒவ்வொரு தமிழனுக்கும் இது பெருமை. தமிழ் மொழியை நேசிப்பவர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும். தமிழை நேசிக்கும் மாணவர்கள் இப்போதிருந்தே இன்று முதல் தமிழில் கையெழுத்திடுவது என இந்த முத்தமிழ் மன்ற துவக்க விழாவில் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சாதாரண கையெழுத்தில் கூட அன்னிய மொழியை நுழைக்கும் நாம், தாய் மொழியை எப்படி வளர்ப்பது?


தமிழ் எனும் தொன்மையான மொழியை ஆழமாக கற்க, தினமும் சிறிது நேரமாவது இலக்கிய நூல்களை வாசிக்க வேண்டும். மாணவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். ஒவ்வொரு மாணவனும் மாமனிதனாக உயர வேண்டும். சாதாரண கொசு கூட சாகும் போது கைத்தட்டல் பெறுவதாக ஒரு மாணவர் கவிதை பாடினார். தமிழ் இலக்கியங்களை படித்தால் இது போல் ஒவ்வொரு மாணவனாலும் கவிதை எழுத முடியும்.


கல்லில் உள்ள தேவையில்லாத பகுதியை செதுக்கி சிலை வடிப்பவரை சிற்பி என்கிறோம். இதனால்தான் மாணவர் மனதில் தேவையில்லாத விஷயங்களை நீக்கி செதுக்கும் பணியை செய்யும் ஆசிரியரை, சிற்பி என்கிறோம். நிலவை பார்த்து பாடிய பாரதியின் வரிகளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சந்திராயன் மூலம் நிஜமாக்கி விட்டார். இது போல் வேளாண் மாணவர்கள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இத்துறையின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.


நமக்காக சாகுபடி செய்யும் விவசாயிகள், சாகும்படி செய்து விடக்கூடாது. அவர்களின் வாழ்வு செழிக்க வேளாண் மாணவர்களும் விஞ்ஞானிகளும் பாடுபட வேண்டும். நமது பிறப்பு தரித்திரமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும். இவ்வாறு, கவிதாசன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us