UPDATED : நவ 04, 2023 12:00 AM
ADDED : நவ 04, 2023 07:42 PM
சென்னை:
தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அகராதியியல் நாள் போட்டிகளில் வெற்றிபெற்றோர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ் வளர்ச்சி துறை, தமிழ் அகராதியை உருவாக்கிய வீரமாமுனிவரின் பிறந்தநாளை, அகராதியியல் நாளாக கொண்டாடுகிறது. அந்தவகையில், இந்த மாதம், 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாக, மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு, ஓவிய போட்டியும், கலை சொல்லாக்க போட்டியும், சென்னையில் நடந்தன.கலைச் சொல்லாக்க போட்டியில், திருவள்ளூர் அம்மையார்குப்பம், திருமுருக கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர் முகிலரசன் முதலிடம் பிடித்தார். மயிலாடுதுறை புனித சின்னப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைச்செல்வி இரண்டாம் இடம் பிடித்தார்.ஓவிய போட்டியில், சென்னை, போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி புஷ்பலதா முதல் இடம்; மதுரை தியாகராஜர் நன்முறை மேல்நிலை பள்ளி மாணவர் சந்தோஷ்ராஜ் இரண்டாம் இடம் பிடித்தனர்.செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் விஜயராகவன் கூறியதாவது:
மாணவர்கள் தமிழ் மொழியிலும், படைப்பாற்றலிலும் சிறந்து விளங்கும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில், முதலிடம் பெற்றோருக்கு தலா 10,000 ரூபாய்; இரண்டாம் இடம் பிடித்தோருக்கு தலா 5,000 ரூபாய், அகராதியியல் நாள் விழாவில் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
