UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 04:42 PM
ஓமலுார்:
சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், 68, பதிவாளர் தங்கவேல், 60, கணினி துறை இணை பேராசிரியர் சதீஷ்குமார், 45, திருச்சி, பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராம்கணேஷ், 54, ஆகியோர் இணைந்து, லாப நோக்கம் கொண்ட அமைப்பை துவங்கியுள்ளனர் என, பல்கலை தொழிலாளர் சங்க, சட்ட ஆலோசகர் இளங்கோ புகார் அளித்தார்.அதன்படி, துணைவேந்தர் ஜெகநாதனை, போலீசார் கைது செய்தனர். பின் நிபந்தனை ஜாமினில் வந்தார். எனினும், நேற்று முன்தினம் மாலை, அவரின் அலுவலகம், வீடு, பயணியர் மாளிகை, பதிவாளர் அலுவலகம் உட்பட, ஏழு இடங்களில், போலீசார் சோதனையை துவங்கினர்.நேற்று மதியம், 12:45 மணிக்கு சோதனை முடிந்தது. முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை அட்டைப்பெட்டியில் மறைவாக எடுத்துச்சென்றனர். அதுபோல, பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டோர் அலுவலகங்களில் இருந்து மடிக்கணினி, பென் டிரைவ், ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்களை எடுத்துச்சென்றனர்.ஜெகநாதன் கைது செய்யப்பட்ட இரவே, பல்கலையில் உள்ள ஒருவர், ஆவணங்களை காரில் எடுத்துச் சென்றதாக தகவல் பரவி வருகிறது. இதனால் மிக முக்கிய ஆவணங்கள் கடத்தப்பட்டதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.