வீணாகும் விளையாட்டு மைதானம்; கல்வித்துறை பாராமுகம்
வீணாகும் விளையாட்டு மைதானம்; கல்வித்துறை பாராமுகம்
UPDATED : டிச 30, 2023 12:00 AM
ADDED : டிச 30, 2023 10:41 AM
பல்லடம்:
பல்லடத்தில், அரசு பள்ளி மைதானம் வீணாக கிடக்கும் நிலையில், பள்ளி கல்வித்துறை பாராமுகமாக இருந்து வருகிறது.பல்லடம்- மங்கலம் ரோட்டில், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு கல்லுாரி ஆகியன செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில், அரசு மேல்நிலை பள்ளியில் இருந்து, ஆண்கள், பெண்கள் பள்ளிகள் மற்றும் அரசு கல்லுாரி ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டன.அரசு பள்ளிக்கென பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 27 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், ஆண்கள் பள்ளிக்கென சில ஏக்கர் நிலங்கள் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு விளையாட்டு மைதானம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், மீதமுள்ள விளையாட்டு மைதான நிலம், பயன்பாடின்றி வீணாகி வருகிறது.அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர்களின் உடல் கட்டுப்பாடு மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்த, விளையாட்டு பயிற்சிகள் மிக அவசியம். பெரும்பாலான அரசு பள்ளிகளில், இதற்கான வசதி வாய்ப்புகள் கிடையாது.பல்லடம் வட்டாரத்தில் அதிக இட வசதி கொண்டதாக அரசு பள்ளிகள் உள்ளன. ஆனால், அவை முறையாக மாணவ, மாணவியருக்கு பயன்படாமல் வீணாகி வருகின்றன. பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல ஏக்கர் விளையாட்டு மைதானம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், வழித்தடமாகவும் பயன்பட்டு வருகிறது.பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கும் அரசு பள்ளி நிலத்தை மீட்பதற்கு உண்டான முயற்சிகளை பள்ளி கல்வி துறையும் மேற்கொள்ளாமல் உள்ளது. எதிர்காலத்தில், பள்ளிக்கல்வி துறை இடம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு கபளீகரம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதால், விளையாட்டு மைதானத்தை மீட்பதற்கு உண்டான நடவடிக்கையை பள்ளி கல்வி துறை மேற்கொள்ள வேண்டும்.