UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:26 AM
சென்னை:
தமிழர்களின் மொழியையும், கலாசாரத்தையும் அழிக்க வந்தவர் கால்டுவெல் என தமிழக கவர்னர் ரவி பேசினார்.டாக்டர் ராஜா தலைமையில், சிவகுமார், சிதம்பரம், காளைராஜன், ராஜன், ஸ்ரீதர், இளங்கோவன் ஆகியோர் தொகுத்த, தமிழ் கல்வெட்டுகளில் பாரதப் பண்பாடு, பழந்தமிழ் இலக்கியங்களில் பாரதப் பண்பாடு என்ற நுால்களை, ராஜ்பவன் வெளியீடாக கவர்னர் ரவி வெளியிட்டார்.புரட்சிகர தத்துவம்
பின்னர் அவர் பேசியதாவது:
நாம் யார், நம் பண்பாடு என்ன, கலாசாரம் என்ன, கடந்த காலம் எப்படி இருந்தது, இலக்கியங்கள் என்னென்ன கூறின என்பதை அறியும் சான்றாக, இந்த நுால்கள் உள்ளன. நம் பண்பாட்டு அடையாளங்களை காப்பதற்கான தொழில் நுட்பகங்களை, நாம் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ரிஷிகளும், சித்தர்களும் அரும்பாடுபட்டு, நம் பாரதத்தின் ஒவ்வொரு அங்குலத்தின் பண்பாட்டையும் உருவாக்கி காத்துள்ளனர் என்பதை இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.இந்த புத்தகங்கள் உருவாக்கும் பணியின் வாயிலாக, நம் நாட்டின் வரலாறு குறித்த பல்வேறு தகவல்களை அறிய முடிந்தது.ஆத்மிகான் என்ற, மனித உயிர்கள் மட்டுமின்றி, விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் ஒரே மாதிரியாக போற்றப்பட வேண்டியவை என்ற, புரட்சிகர தத்துவத்தை ரிஷிகள் நமக்கு உணர்த்திஉள்ளனர்.வரலாறு அறியாதவர்களால், தன் எதிர்காலத்தை கட்டமைக்க முடியாது. நமக்கு நீண்ட வரலாறும், கலாசாரமும் உள்ளது. நாம் யாராக வளர்ந்தோம் என்பதை 2014 மே 18ல் வெளியான, லண்டன் கார்டியன் பத்திரிகையின் தலையங்கம் உணர்த்தியது.அதாவது, இந்தியாவை பிரிட்டிஷார் நேரடியாக ஆண்டு முடித்த பின், தன் கொள்கைகளால் ஆண்டது எனும் வரலாறு இப்போது வெளியேறுகிறது. காரணம் பாரதத்தில், புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ளது என எழுதியது. இதிலிருந்து, நாம் யாரால் ஆளப்பட்டிருந்தோம் என்பதை அறியமுடியும்.காலனிய சிந்தனைகளால், நம் நாட்டு மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். நம் நாட்டில் பல மொழிகள், இனங்கள், புவியியல் அமைப்புகள், கலாசாரங்கள் இருந்ததை, காலனிய ஆதிக்கம் சாதகமாக்கியது.அதற்கு முன், பல வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் பத்ரிநாத், காசி, ராமேஸ்வரம், துவாரகை உள்ளிட்ட புனித தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்தனர்.ஒரே குடும்பம்
அவர்கள், இதுபோன்ற விஷயங்களால் ஒன்றுபட்டு, ஒரே குடும்பம் என்ற சனாதன உணர்வுடன் வாழ்ந்தனர். ஆனால், நாட்டின் பிரிவினையை விரும்பிய பிரிட்டிஷார், பல்வேறு பாகுபாடுகளை கற்பித்தனர்.அவர்கள், இனம், மதத்தால் பிரிவினையை உண்டாக்க சூழ்ச்சிகளை செய்தனர். அதைப் பயன்படுத்தி வடகிழக்கு மாநில மக்களிடம் பிரிவை உண்டாக்கினர்.தமிழகத்தில் வேறு வித பிரசாரத்தை செய்தனர். தமிழ் மக்களின் கலாசாரத்தையும், அடையாளத்தையும் அழிக்க திட்டமிட்ட அவர்கள், தமிழகத்தில் இருந்த கர்நாடக இசை பற்றிய விமர்சனத்தை முன்வைத்து, ராமர், தியாகராஜர் உள்ளிட்டோரை விமர்சித்தனர்.இந்த தொடர் பிரசாரத்துக்காக, பாஸ்டன் பள்ளியில் தேறாத, இளம் மாணவர்களை ஒருங்கிணைத்து, மூன்று மாத பயிற்சிக்கு பின் இந்தியாவுக்கு கதை சொல்லிகளாக அனுப்பினர். அவர்களை ராணுவத்தினர், வங்கியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் ஆதரித்தனர்.அதில் ஒருவர் தான் ராபர்ட் கால்டுவெல். அவர், திராவிட மொழிகள் பற்றிய இலக்கண நுாலை எழுதி, திராவிடர்கள் வேறானவர்கள் என கற்பித்தார். இதை உண்மை என நம்பிய திராவிட இயக்கங்கள், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக போராடின.ஆனால், அவரை பார்த்து நீங்கள் பள்ளிப்படிப்பில் தேறியவரா, நீங்கள் பிரசாரகரா, மொழியியலாளரா என யாரும் கேட்கவோ, ஆராயவோ இல்லை. இதனால், தமிழர்களின் தனித்துவமும், கலாசாரமும் தான் அழிந்தன.நம் ராமேஸ்வர கோபுரத்தில் இருந்த மஞ்சள் வண்ணம் போன்ற தனித்துவ அடையாளங்களை இழக்க, அவரும் அவர் உருவாக்கிய காலனிய பிரிவினை சிந்தனைகள் தான் காரணம்.தற்போது, அவற்றை மீட்கும் வகையில், நம்மை நாம் உணரும் வகையில், நமக்கு நம் மண்ணையும், நம் மக்களின் வாழ்வையும் அதற்கான உண்மைகளையும் இந்த புத்தகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன.இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.