UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 12:09 PM
சென்னை:
கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமிற்கு, பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
த
மிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வாயிலாக, விளையாட்டுகளில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். இந்தாண்டு, இன்று முதல் மே 13ம் தேதி வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி தரப்படுகிறது.
இந்த கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவியர், பயிற்சி கட்டணமாக, சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்ட வேண்டும் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க, ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பால், விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், மாணவர்களின் விளையாட்டு பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகளை பார்க்கும் போது, தகுதி இல்லாதவர் கையில் அதிகாரம் கிடைத்தால், அவர் திறமைசாலிகளைக்கூட தகுதியற்றவர்களாக்கி விடுவார். எனவே, அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.