UPDATED : ஆக 10, 2024 12:00 AM
ADDED : ஆக 10, 2024 10:38 AM
புதுடில்லி:
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வெளியிடப்பட்ட மூன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை நீக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராஜ்யசபாவில் சமீபத்தில் எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் அரசியலமைப்பின் முகப்புரை இருப்பதாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ராஜ்ய சபாவில் தவறான தகவல்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ளதாக கூறி அவர் மீது சிறப்புரிமை நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கருக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ள கடிதம்:
இந்த கடிதத்துடன் 2022ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட மூன்று மற்றும் 6ம் வகுப்புகளின் ஒரு சில பாடப்புத்தகங்களை இணைத்துள்ளேன்.
இதில், முந்தைய பதிப்புகளைப் போல், அரசியலமைப்பின் முகப்புரை இடம்பெற்றுள்ளது. அதேபோல், 2024ல் வெளியிடப்பட்ட அந்த வகுப்புகளின் பாடப்புத்தகங்களில் முகப்புரை இடம்பெறவில்லை.
ஆனால், அவை இருப்பதாக தவறான தகவலை தர்மேந்திர பிரதான் சபையில் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு உரிமை மீறலாகும். ஆகையால், அவர் மீது சிறப்புரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.