UPDATED : செப் 07, 2024 12:00 AM
ADDED : செப் 07, 2024 11:27 AM

புதுச்சேரி:
முதுநிலை, இளநிலை மருத்துவ மாணவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பயிற்சிகால உதவித் தொகையை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.பி.பி.எஸ்., பயிலும் மாணவர்களுக்கு பட்டப்படிப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக மருத்துவமனையில் பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப்பின் செய்கின்றனர். இதற்காக, தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறையின்படி அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
குறிப்பாக, முதுநிலை மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு முதலாமாண்டில் -43,000 ரூபாய், இரண்டாம் ஆண்டில் 45,000 ரூபாய், மூன்றாம் ஆண்டில் 47 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்க வேண்டும். இதேபோன்று யூ.ஜி.,மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகள் பயிற்சி மருத்துவர்களுக்கு சரிவர வழங்கவில்லை. அதே நேரத்தில் பயிற்சி மாணவர்களிடம் கடுமையான வேலையை மட்டும் வாங்கி கொள்கின்றன. இதேபோல் பயிற்சிகால உதவித் தொகையும் சீராக வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கல்லுாரியும் ஒவ்வொரு மாதிரியாக பயிற்சி உதவி தொகையை அளித்து வந்தன.
புதுச்சேரியில் அரசாணை ஏதும் இல்லாததே இதற்கு முக்கிய காரணம். இது தொடர்பாக தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் சென்ற நிலையில் சுகாதார துறை அதிரடியாக மருத்துவ மாணவர்களில் பயிற்சி கால உதவி தொகையை உயர்த்தி ஒரே மாதிரியாக வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
அதில், இனி புதுச்சேரியில், முதுநிலை மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு முதலாமாண்டில் 43,000 ரூபாய், இரண்டாம் ஆண்டில் 45,000 ரூபாய், மூன்றாம் ஆண்டில் 47 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்க வேண்டும். இதேபோன்று யூ.ஜி.,(எம்.பி.பி.எஸ்.,) மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். அனைத்து தனியார் மருத்துவ கல்லுாரிகளும் பயிற்சி டாக்டர்களுக்கான உதவித் தொகை வழங்குவதை இனி உறுதிசெய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.
காலாண்டிற்கு...
மருத்துவ மாணவர்களின் பயிற்சி கால உதவித் தொகை தொடர்பான அறிக்கை காலாண்டிற்கு ஒரு முறை சுகாதார துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பயிற்சி டாக்டர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் உதவித் தொகை பரிமாற்றம் செய்ய வேண்டும். இதில் தவறுகள் ஏதும் இருப்பது தெரிய வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை ஏற்கனவே எச்சரித்து சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
அத்துடன் பயிற்சி டாக்டர்கள் உதவித் தொகை வழங்குவது தொடர்பாக துல்லியமான ஆவணங்களையும் பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து திடீர் ஆய்வு செய்து, தனியார் மருத்துவ கல்லுாரிகள் தொடர்பாக தேசிய மருத்துவ கவுன்சிலிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளது.