UPDATED : அக் 09, 2024 12:00 AM
ADDED : அக் 09, 2024 10:05 PM

சென்னை:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க, கட்டண நிர்ணய குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றும், இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
சென்னையில், ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளி இயங்குகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் இணைப்பை பெற்றது.
கட்டண பாக்கி
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி, இரண்டு ஆண்டுகளாக கட்டணம் செலுத்தவில்லை என்றும், 76,275 ரூபாய் கட்டண பாக்கியை, 12 சதவீத வட்டியுடன் செலுத்தும்படியும், பள்ளி நிர்வாகம் கோரியது. இதுகுறித்து, சிவில் நீதிமன்றத்தில், பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
அதற்கு, மாணவியின் தந்தை தாக்கல் செய்த பதில் மனுவில், கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த தொகைக்கும் கூடுதலாக, பள்ளி நிர்வாகம் வசூலிக்கிறது. அவ்வளவு தொகையை வசூலிக்க, பள்ளிக்கு உரிமை இல்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து, சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கட்டண நிர்ணய குழுவிடம் இருந்து அறிக்கை பெறாமல், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த முடியாது. அதனால், குழு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஆசான் மெமோரியல் பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன், விசாரணைக்கு வந்தது.
தடை இல்லை
மாணவியின் தந்தை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், கட்டண கணக்கீடு ஒழுங்குமுறை சட்டத்துக்கு, உச்ச நீதிமன்றம் முழுமையான தடை விதிக்கவில்லை. பள்ளிகளில் வழங்கப்படும் வசதிகளுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க, கட்டண நிர்ணய குழுவுக்கு அதிகாரம் உள்ளது, என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி லட்சுமி நாராயணன் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2009ல், பள்ளிகளில் கல்வி கட்டண ஒழுங்குமுறை சட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தியது. இந்தச் சட்டம், பள்ளிகளில் வழங்கப்படும் வசதிகளுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க, கட்டண நிர்ணய குழுவுக்கு அதிகாரம் வழங்குகிறது.
பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகார் அளிக்கவும், அதை விசாரிக்க குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும், சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேல்முறையீடு
இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பித்தது.
அதை எதிர்த்து, தனியார் பள்ளிகளின் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில் கேட்கும் கட்டணம் அதிகமா அல்லது பள்ளியில் வழங்கப்படும் வசதிகளுக்கு இணையான கட்டணமா என்பதை சரிபார்க்க, கட்டண நிர்ணயக் குழுவுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவை தவிர்த்து, மற்ற சட்டப்பிரிவுகளை நிறுத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
எனவே, ஆவணங்களை ஆராய்ந்து சரிபார்க்க, கட்டண நிர்ணய குழுவை உச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கும் போது, சட்டப்பூர்வ கடமையை மேற்கொள்ளும்படி, குழுவுக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு உத்தரவிட, சிவில் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அதேநேரத்தில், விசாரணைக்கு காலவரம்பை நிர்ணயிக்காதது தவறு. எனவே, கட்டண கணக்கீட்டை சரிபார்க்க, கட்டண நிர்ணய குழுவுக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டதை ஏற்கிறேன்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.