UPDATED : ஜன 10, 2025 12:00 AM
ADDED : ஜன 10, 2025 07:16 AM
கோவை :
கோவை, அரசு கலைக்கல்லுாரி தமிழ் உயராய்வுத் துறை மற்றும் தொல்லியல் மரபு மன்றம் சார்பில், தமிழின வரலாற்றுத் தேடலுக்கான, அக்னிக் குஞ்சுகளின் சிறகடிப்பு எனும் தலைப்பில், தேசிய கருத்தரங்கம் கல்லுாரி வளாகத்தில், நேற்று துவங்கியது.
தொல்லியலில் இன்றைய போக்குகள் எனும் தலைப்பில், புதுச்சேரி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறை தலைவர் சுப்புராயலு பேசியதாவது:
தொல்லியல் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த ஆர்வம் முறைப்படுத்தப்பட வேண்டும். தொல்லியல் துறையில் இன்று அறிவியலுக்கு இடமில்லை.
இன்று, அகழாய்வில் ஏதாவது பொருட்கள் கிடைத்து விட்டால், அது பெரியளவில் விளம்பரப்படுத்தப்படுகிறது; மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது. கீழடியிலும் அதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட பல செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. தொல்லியல் துறையில் முறையாக அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறதா என்பது சந்தேகமே.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தமிழ் உயராய்வுத் துறை ஒருங்கிணைப்பாளர் பூங்கொடி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் எழிலி தலைமை வகித்தார். தமிழக தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர்கள் பூங்குன்றன், சாந்தலிங்கம், வேதாசலம் உள்ளிட்ட பலர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.