பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்: தினகரன் கண்டனம்
பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்: தினகரன் கண்டனம்
UPDATED : பிப் 04, 2025 12:00 AM
ADDED : பிப் 04, 2025 08:33 AM

சென்னை :
மொபைல் போன்களை பறிமுதல் செய்து, பத்திரிகையாளர்களை காவல் துறை அச்சுறுத்துவற்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவரது அறிக்கை:
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில், முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு, தங்கள் முன்பு ஆஜராகும் பத்திரிகையாளர்களை, குற்றவாளிகளை போல நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, 'வாட்ஸாப்' வழியாக சம்மன் அனுப்புவதோடு, விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆஜராகும் பத்திரிகையாளர்களின், மொபைல் போன்களை பறிமுதல் செய்வதும், வழக்கிற்கு சிறிதளவும் சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டு, அவர்களை அச்சுறுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நிற்கும் பத்திரிகையாளர்கள் மீது, பழியை போட முயற்சிப்பது சரியல்ல. எனவே, விசாரணைக்கு ஆஜராகும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதையும், அவர்களிடமிருந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்வதையும், உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.