யு.ஜி.சி., வரைவு விதிமுறைகள் பல்கலை வளர்ச்சிக்கானது
யு.ஜி.சி., வரைவு விதிமுறைகள் பல்கலை வளர்ச்சிக்கானது
UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:41 AM
புதுடில்லி:
பல்கலைகளில் துணைவேந்தர் நியமனம், ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக, பல்கலை மானியக் குழு விதிமுறைகளை மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு விதிமுறைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த வரைவு விதிமுறைகளுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகம், கேரளா உட்பட சில மாநிலங்களும் இந்த வரைவு விதிமுறைகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு லோக்சபாவில் பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது:
இந்த வரைவு விதிமுறைகள், மாநில பல்கலைகளுக்கு அதிக தன்னாட்சி அதிகாரத்தையும், ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் அளிப்பதாகவே உள்ளன. ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைகளே முடிவு செய்வதற்கான வாய்ப்பு தரப்படுகிறது.
அதுபோல துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைப்பது, ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடுவது என, பலவற்றிலும் மாநில அரசின் ஆலோசனையின் அடிப்படையில் பல்கலைகள் முடிவுகளை எடுக்கும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, மாநில பல்கலைகளின் வளர்ச்சியை முன்வைத்து இந்த வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.