UPDATED : ஏப் 30, 2025 12:00 AM
ADDED : ஏப் 30, 2025 06:11 PM
பெங்களூரு:
அங்கன்வாடிகளுக்கு வரும் சிறார்களுக்கு ராகி ஹெல்த் மிக்ஸ் வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது அரசு பள்ளிகளுக்கு, ஊட்டச்சத்து கலந்த உணவை வழங்குவதில், சத்யசாயி அன்னபூர்ணா டிரஸ்ட், அரசுடன் கைகோர்த்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் சிறார்களின் நலனை கருத்தில் கொண்டு, திட்டம் வகுக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளை போன்று, அங்கன்வாடிகளுக்கு வரும் சிறார்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ராகி ஹெல்த் மிக்ஸ் வழங்க திட்டமிட்டுள்ளோம். வரும் ஜூலை முதல் அமல்படுத்தப்படும்.
முதல் கட்டமாக யாத்கிர், சாம்ராஜ்நகர், பாகல்கோட், ஹாவேரி, தார்வாட் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். 4,000 சிறார்களுக்கு ராகி ஹெல்த் மிக்ஸ் வழங்கப்படும். அதன்பின் ஓராண்டில் மற்ற மாவட்டங்களின் அங்கன்வாடி சிறார்களுக்கும், திட்டம் விஸ்தரிக்கப்படும்.
ராகியுடன், வெல்லம், பால் சேர்க்கப்படுவதால் சிறார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். அவர்களின் உடல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். சாயி டிரஸ்ட் சார்பில், கடலை மிட்டாய், லட்டு வழங்கும் ஆலோசனையும் உள்ளது.
திட்டத்துக்கு 75 சதவீதம் தொகையை, டிரஸ்டும், 25 சதவீதம் மாநில அரசும் ஏற்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

