UPDATED : அக் 30, 2025 07:31 AM
ADDED : அக் 30, 2025 07:32 AM

கோவை:
நவீன கல்வி முறையில், டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாட்டால் குழந்தைகள் மத்தியில் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. இதனால், எலும்புகளின் இயக்கத்தன்மை, வலிமையும் குறைவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி கல்வியில் கடந்த காலங்களில் எழுத்து பயிற்சி முக்கிய பங்கு வகித்தது. வீட்டுப்பாடங்கள் எழுதுவது, வகுப்பறையில் பாடங்கள் சார்ந்த குறிப்பேடு எடுப்பது என அதிகளவில் எழுதும் வேலைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
தற்போது, எழுத்து பயிற்சி பெரிதாக வழங்கப்படுவதில்லை. சில சமயங்களில் அதிகமாக எழுதும் வேலைகள் கொடுத்தால், பெற்றோர் பள்ளிகளில் வாக்குவாதம் செய்வதாகவும், வீட்டுப்பாடங்களை குறைத்துக் கொடுக்க ஆசிரியர்களிடம் கூறுவதாகவும் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் குறித்து, அரசு மருத்துவமனை ஆர்த்தோ பிரிவு டாக்டர் வெற்றிவேல் செழியன் கூறியதாவது:
குழந்தைகளுக்கு எழுதும் பயிற்சி மிகவும் அவசியம். டிஜிட்டல் சாதனங்களில் அதிகம் செலவிடும் குழந்தைகள் எழுதுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
எழுதும்போது கை வலிப்பதாக பெற்றோரும் தவறான புரிதலில் வீட்டுப்பாடங்களை குறைத்து வழங்க கூறுகின்றனர்.
எழுத்து பயிற்சி என்பது கை, கை இணைப்புகளின் இயக்கத்துக்கு மிகவும் முக்கியமானது. ஆரம்பத்தில் வலி ஏற்பட்டாலும், எளிதில் பழகிவிடும். கடந்த காலங்களில், தண்டனை கொடுப்பது கூட 10 முறை எழுதுங்கள்; 50 முறை எழுதுங்கள் என்று ஆசிரியர்கள் கூறுவார்கள். எழுத்து பயிற்சி எலும்பை வலுப்படுத்தும்; சிந்தனை திறனை மேம்படுத்தும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

