UPDATED : டிச 05, 2025 06:52 AM
ADDED : டிச 05, 2025 06:52 AM
சென்னை:
நெருக்கடியில் இருக்கும் சென்னை பல்கலையை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை பல்கலையில், 549 பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 150 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், முதுநிலை பட்டப்படிப்புகளில் சேருவோரின் எண்ணிக்கை, குறைந்து கொண்டே வருகிறது.
பல்கலையில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, சம்பளம் வழங்க முடியாத நிலை தற்போது உள்ளது. கடந்த 2015 முதல் 2025 வரை, ஓய்வு பெற்ற 465 பேருக்கு, ஓய்வூதிய பலன்கள் வழங்க 95 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
அதனால், பல்கலையின் 1,450 ஓய்வூதியதாரர்களுக்காக வைக்கப்பட்டிருந்த, 318 கோடி ரூபாய் நீண்டகால நிதியில் இருந்து, 45 கோடி ரூபாயை, ஓய்வு கால பலன்களை வழங்க, சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது, பல்கலைக்கு, மிகப்பெரிய நிதி சிக்கலை ஏற்படுத்தும். முதல்வர் ஸ்டாலின், நெருக்கடியில் இருந்து பல்கலையை மீட்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

