UPDATED : மார் 31, 2026 08:44 PM
ADDED : மார் 31, 2026 08:45 PM
திருப்பூர்:
'பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் எளிதாக இருந்தது' என மாணவர்கள் கூறினர். 'வழக்கத்தை விட, உயிரியல் பாடம் சார்ந்த கேள்விகள் குறைவாகவே கேட்கப்பட்டிருந்தன' என, ஆசிரியர்கள் கூறினர்.
நேற்று, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அறிவியல் பாட தேர்வு நடந்தது. மொத்தம், 29 ஆயிரத்து 418 மாணவ, மாணவியர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்த நிலையில், 29 ஆயிரத்து 3 பேர் தேர்வெழுதினர்; 415 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தனித்தேர்வர்களக, 857 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 793 பேர் தேர்வெழுதினர்; 64 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
சந்தோஷ்:
அறிவியல் தேர்வு எளிதாக இருந்தது; கட்டாய வினாக்கள் கூட எளிமையாக தான் இருந்தது. புத்தகத்தில் உள்ள வினாக்கள் தான் கேட்கப்பட்டிருந்தன; இதனால், விடையளிப்பது எளிதாக இருந்தது. 'சென்டம்' மதிப்பெண் பெறவும் வாய்ப்புண்டு.
மிர்த்திகா:
திரும்ப திரும்ப படித்த வினாக்கள் தான் அதிகம் கேட்கப்பட்டன. இதனால், எளிதாக விடையெழுத முடிந்தது. புத்தகத்தில் உள்ள வினாக்களே கேட்கப்பட்டதால், எளிதாக பதில் எழுத முடிந்தது. தேர்வு கடினமாக இல்லை.
அறிவியல் ஆசிரியர் கூறியதாவது:
பொதுவாக அறிவியல் பாடம் எளிமையாக இருந்தது. 1, 2 மற்றும் 4 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும், ஏற்கனவே நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு, அலகு தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தான், அதிகம் கேட்கப்பட்டிருந்தது.
வினா எண். 27 மட்டும், படைப்பாற்றலை பயன்படுத்தி எழுத வேண்டும். இயற்பியல் மற்றும் 10 நான்கு மதிப்பெண் வினாக்களில், 50 சதவீதம் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்தும், 50 சதவீதம் உயிரியில் பாடங்களில் இருந்தும் கேட்கப்பட வேண்டும்.
ஆனால், உயிரியியல் பாடத்தில் வழக்கத்தை காட்டிலும் குறைவான அளவில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இருப்பினும், மாணவர்கள் தேர்ச்சி பெறுவது எளிது.
இவ்வாறு அவர் கூறினார்.

