அங்கன்வாடிகளை தத்தெடுக்க பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு
அங்கன்வாடிகளை தத்தெடுக்க பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு
UPDATED : ஏப் 06, 2026 09:47 AM
ADDED : ஏப் 06, 2026 09:48 AM
சென்னை:
'நாடு முழுதும் உள்ள பல்கலைகள், கல்லுாரிகள், அங்கன்வாடி மையங்களை தத்தெடுக்க வேண்டும்' என, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கான தேசிய கருத்தரங்கு, சமீபத்தில் நடந்தது. இதில், 'குழந்தைகளுக்கான ஆரம்ப கல்விக்கு, அடித்தளம் அமைத்தல்' என்ற தலைப்பில், பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
அதன்படி, நாடு முழுதும் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகள், தங்களின் அருகில் உள்ள, ஐந்து அல்லது ஆறு அங்கன்வாடி மையங்களை, தத்தெடுக்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டது.
பல்கலை, கல்லுாரி அதிகாரிகள், கல்வி, சமூகப் பணி, ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், குழந்தை வளர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நலன் போன்ற துறைகளை சேர்ந்த மாணவர்களின், அங்கன்வாடி ஈடுபாட்டை ஒருங்கிணைக்க வேண்டும். 3 - 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை மேம்படுத்தவே, இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பல்கலை மற்றும் கல்லுாரி நிறுவனங்கள், தங்களின் அருகில் உள்ள, ஐந்து அல்லது ஆறு அங்கன்வாடி மையங்களை தத்தெடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

