UPDATED : ஏப் 18, 2026 10:12 AM
ADDED : ஏப் 18, 2026 10:13 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், மாதிரி அஞ்சல் நிலையம் திறக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் சச்சிதானந்த பள்ளியில் மூன்று நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பள்ளியில், மாதிரி அஞ்சல் நிலையம் துவக்க விழா நடந்தது. பள்ளியின் செயலர் கவிதாசன் தலைமை வகித்தார்.
திருப்பூர் கோட்ட மேற்கு மண்டல அஞ்சல் நிலைய தலைமை கண்காணிப்பாளர் பட்டாபிராமன், மாதிரி அஞ்சல் நிலையத்தை திறந்து வைத்து பேசுகையில், “தமிழகத்திலேயே மேற்கு மண்டலத்தில் இப்பள்ளிக்கு மட்டும் தான், கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது. புத்தக அறிவைத் தாண்டி, உங்களுக்கு பல நடைமுறை அறிவை தருகிறது. இப்பள்ளியில் அமைத்துள்ள மாதிரி அஞ்சல் நிலைய திறப்பு விழாவில், மாணவர்கள் அஞ்சல் தலைகள் மற்றும் நாணயங்கள் சேகரிப்பு பற்றிய பேச்சு வியப்பாக இருந்தது,” என்றார்.
விழாவில் சித்தார்த், ஸ்ரீ சர்வேஷவர், சித்தார்த் அஸ்வின் ஆகிய மாணவர்கள் தபால் தலை சேகரிப்பு தொடர்பான அனுபவங்களை கூறினர். கோவை பாரதியார் பல்கலை பொருளாதாரத்துறை பேராசிரியர் சங்கமித்ரா, பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, மேட்டுப்பாளையம் அஞ்சல் நிலைய தலைமை அஞ்சல் அதிகாரி நாகஜோதி, பள்ளியின் துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் பேசினர்.
மாணவி அக்ஷரா வரவேற்றார். மாணவர் சர்வேஷ் கிருஷ்ணா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சச்சிதானந்த அஞ்சல் தலை மன்ற பொறுப்பாசிரியர் ராஜசேகர் செய்திருந்தார்.
