UPDATED : ஜூன் 10, 2026 04:55 PM
ADDED : ஜூன் 10, 2026 04:56 PM
ராஜபாளையம்:
சத்திரப்பட்டி அருகே சிவலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் புதிய மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதால் பெற்றோர் பரிதவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என 22 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதில் மூன்று ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக உள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு முன் ஆங்கில கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டது. முதலில் 6 முதல் 10ம் வகுப்பு வரையும், 2023ல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு வரை 3 பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஆங்கில கல்வியில் 8-ம் வகுப்பு முடித்த மாணவர்களும் தமிழ் வழி வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளனர். புதிதாக 6-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையும் நிறுத்தப்பட்டுள்ளதால் பெற்றோர் தவிப்பிற்கு உள்ளானதுடன் வேறு வழியின்றி தனியார் பள்ளிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறுகையில்:
இப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்த 16 மாணவர்கள் கட்டாயமாக ஒன்பதாம் வகுப்புக்கு தமிழ் வழியில் மாற்றப்பட்டுள்ளனர். புதிதாக 6ம் வகுப்பில் ஆங்கில வழி சேர்க்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.
வேறு வழியின்றி ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் அதிக கட்டணத்தில் தனியார் பள்ளிகளுக்கு மாற வேண்டி உள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாவதை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
