UPDATED : ஜூன் 21, 2026 01:13 PM
ADDED : ஜூன் 21, 2026 01:15 PM
சிதம்பரம்:
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி, தொழிற்கல்வி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு ஏற்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 400, தர ஊதியத்துடன் ஊதியம் பெற்றுக்கொண்டு பணியாற்றி வந்தனர். ஓய்வு பெற்ற தொழில் கல்வி ஆசிரியர்கள் தர ஊதியப் பிரச்சனையால் ஓய்வூதியப் பலன்களை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், தொழிற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் முயற்சியாலும் தர ஊதியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தொழிற்கல்வி ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்த நிலையில், கல்வி அமைச்சரின் வழிகாட்டுதல்படி, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சித்திக், மாநில கணக்காயருக்கு விளக்கக் கடிதத்தை அனுப்பினார்.
இக்கடிதத்தில், தொழிற்கல்வி ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 400 பெற்று வந்தது சரி என்பதால், பணி நிறைவு பெற்ற தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரத்து 400 தர ஊதிய அடிப்படையில் தடையின்றி ஓய்வூதியப் பலன்கள் வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு செய்தித் தொடர்பாளர் முத்துக்குமரன், கூறுகையில், “திருப்பி அனுப்பப்பட்ட மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, ஓய்வூதிய கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும் என தெளிவுரைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், நிதித்துறை மற்றும் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோருக்கு தொழில் கல்வி ஆசிரியர்கள் சார்பில் நன்றித் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
