UPDATED : டிச 13, 2010 12:00 AM
ADDED : டிச 13, 2010 12:59 PM
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானீஷ் உள்பட 34 வெளிநாட்டு மொழிகள் விருப்பப் பாடமாக, எடுத்து படிக்கும் வசதி உள்ளது. இந்த வரிசையில் உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் சீனாவின் மாண்டரின் மொழி சேர்க்கப்பட உள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல், ஆறாம் வகுப்பில் விருப்பப் பாடமாக மாண்டரின் மொழியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் மாண்டரின் மொழியை சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் இது குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாண்டரின் மொழியை சிறப்பாக பயிற்றுவிப்பதற்கு, உண்மை நிகழ்வுகள், விளையாட்டுகள், விவாதங்கள் மற்றும் குறுக்கெழுத்து போட்டி ஆகியவற்றை பயன்படுத்தி பயிற்றுவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீமதி சக்கரவர்த்தி கூறியதாவது: இந்தியா-சீனா இடையே வர்த்தக வாய்ப்புகள் பன் மடங்கு பெருகி வருகிறது. இதனால், அங்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. எனவே, இந்தியர்கள் சீன மொழியை கற்றுக்கொண்டால் ஏராளமான வேலைவாய்ப்புகளை பெற முடியும். இவ்வாறு ஸ்ரீமதி சக்கரவர்த்தி கூறினார்.
சீன மொழியை அறிமுகப்படுத்துவது குறித்து ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளி முதல்வர் ஜோதிபோஸ் கூறுகையில், ‘கடந்த ஆண்டே எங்கள் பள்ளியில் சீன மொழி அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொண்டோம். ஆனால், மாணவர்கள் ஆர்வம் காட்டததால் முயற்சி தோல்வி அடைந்தது. மேலும், சீன மொழியை பயிற்றுவிக்க அனுபவமிக்க ஆசிரியர்களை நியமிப்பதிலும் சிக்கல் உள்ளது’ என்றார்.
