UPDATED : ஜன 22, 2011 12:00 AM
ADDED : ஜன 22, 2011 12:22 PM
அணில் ககோட்கர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கை மற்றும் வேறு சில கமிட்டிகளின் அறிக்கைகளை பற்றி விவாதிக்க, 21-01-2011 அன்று ஐ.ஐ.டி -களின் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இளநிலை படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தலாம் என்ற பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.
தற்போது ஐ.ஐ.டி -களில் இளநிலை படிப்பில் வருடத்திற்கு ரூ.50,௦௦௦௦௦௦000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த தொகையை ரூ. 2 லட்சத்திற்கும் மேலாக உயர்த்துவதற்கு இந்த கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. ஐ.ஐ.டி -களின் பொருளாதார சுயசார்பை முன்னேற்றும் விதமாகவே இந்த பரிந்துரை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கட்டணம் உயர்த்தப்பட்டால், அது மாணவர்களுக்கு பெரும் சுமையாக முடிந்துவிடும் என்றும், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து அவர்களை தடுக்கும் நடவடிக்கையாக இந்த கட்டண உயர்வு ஆகிவிடும் என்றும் கருதி, கவுன்சில் அந்த பரிந்துரையை நிராகரித்து விட்டது.
இளநிலை கல்வி கட்டணத்தை உயர்த்த பரிந்துரைத்த இதே கமிட்டிதான், பிஎச்.டி. மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என்றும், 25% மாணவர்களுக்கான கட்டணங்களை அரசே செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் ஒரு வருடத்திற்கு 10,000௦௦௦ முனைவர் படிப்பு பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு சுமார் 1200 வழிகாட்டு ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
மேலும் ஐ.ஐ.டி -களுக்கான கூட்டு நுழைவுத்தேர்வு மற்றும் பாடத்திட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் டி. ராமசாமி அறிக்கையின் மீதான விவாதம், அவர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாததால் நடைபெறவில்லை.
மேலும் மொரீஷியஸ் நாட்டில் ஒரு தொழில்நுட்ப மையத்தை ஏற்படுத்துவதற்கு இக்கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத்தவிர, ஐ.ஐ.டி -களுக்கான இயக்குனர்கள், இனிமேல் ஆய்வு கமிட்டியின் மூலமாக அல்லாது, வெளிப்படையான விளம்பர செயல்பாடுகளின் மூலமாகவே நியமிக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
