வெளிநாட்டு மருத்துவரா? எம்.சி.ஐ. புதிய கட்டுப்பாடு
வெளிநாட்டு மருத்துவரா? எம்.சி.ஐ. புதிய கட்டுப்பாடு
UPDATED : பிப் 21, 2011 12:00 AM
ADDED : பிப் 21, 2011 12:49 PM
வெளிநாட்டை சேர்ந்த மற்றும் என்.ஆர்.ஐ. மருத்துவர்கள், இனி இந்தியாவில் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செயல்முறைகளை மேற்கொள்ள முன்கூட்டியே எம்.சி.ஐ. அனுமதியை பெற வேண்டும்.
இந்திய மெடிக்கல் கவுன்சில் எடுத்துள்ள இந்த முடிவினை வரவேற்றுள்ள ஒரு தரப்பார், "இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு. ஏனெனில் சில மருத்துவ மனைகள், ஒரு வெளிநாட்டு மருத்துவர் அவரது நாட்டில் என்ன சாதித்துள்ளார் என்பதைப் பற்றி கவலைப்படாமல், அவரின் திறனைப் பற்றி சரியாக ஆராயாமல், உள்நாட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவரை அழைத்து வருகின்றன. எனவே இதுபோன்ற சூழலில் இந்த புதிய விதிமுறை நல்லதுதான்.
மேலும் இந்திய மருத்துவமனைகள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வகையில், எம்.சி.ஐ. தூண்டுகோலாக செயல்பட வேண்டுமென்றும், அந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் நிபுணர் குழுவில் எம்.சி.ஐ. பிரதிநிதி ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும்" என்றும் தெரிவித்தனர்.
ஆனால் இந்த புதிய விதிமுறையை எதிர்க்கும் இன்னொரு தரப்போ, "இது மிகுந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு விதிமுறை. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் இந்தியாவிற்கு வந்து அறுவை சிகிச்சைகளையும், பரிந்துரைகளையும் மேற்கொள்வதில் என்ன தவறு? அவர்கள் இங்கே வந்து தங்களின் அறிவை பகிர்ந்து கொள்வதால், எங்களின் மருத்துவ அறிவும் பெரியளவில் வளர்ச்சி பெறுகிறது. மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. இங்கிருக்கும் பல மருத்துவர்களும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு உரையாற்றுவதற்காக செல்கிறார்கள்.
இந்தியாவில் மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் மேம்பட்டவையாக இருப்பதில்லை. எனவே நாங்கள் இந்த விஷயத்தில் வெளிநாட்டு மருத்துவர்கள் செய்யும் ஆராய்ச்சிகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. மருத்துவ ஜர்னல்களில் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் பற்றிய பல தகவல்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அவற்றை நம் நாட்டில் மதிப்பாய்வு செய்து வெளியிடுவதற்கு அதிக காலதாமதம் ஆகிறது.
ஆனால் இது விரைவாக நடந்தால் இங்குள்ள மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கும். எம்.சி.ஐ. ஏற்படுத்தியுள்ள இந்த புதிய நடைமுறையால், மருத்துவ அறிவை பகிர்ந்து கொள்ளுதல் என்பது பெருமளவில் தடைபட்டு, வெளிநாட்டு மருத்துவர்கள் இந்தியாவிற்கு வருவது பெரிதும் குறைந்துவிடும். எம்.சி.ஐ. எடுத்துள்ள இந்த முடிவானது புத்திசாலித்தனமானதாக இல்லை" என்கின்றனர்.
