UPDATED : பிப் 23, 2011 12:00 AM
ADDED : பிப் 23, 2011 04:02 PM
மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரம் இந்தூர். இந்நகரில் ஏற்கனவே ஐ.ஐ.எம். அமைந்துள்ளது. இந்நிலையில் இம்மாநிலத்தில் ஒரு ஐ.ஐ.டி. அமைக்கும் அனுமதி 11வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி இந்தூர் நகரிலேயே அந்த ஐ.ஐ.டி. அமையும் வகையில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்நகரின் அருகாமையில் உள்ள ஒரு முக்கிய வனப்பகுதியில் 80௦ ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு மத்திய வன அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைப் பற்றி ஆராய்ந்த வன ஆலோசனைக் குழு(எப்.ஏ.சி), அதை நிராகரித்துவிட்டது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இவ்வளவு பெரிய நிலத்தை கையகப்படுத்தி, மரங்களை அழிப்பதானது சூழ்நிலையில் பெரிய மாறுதலை ஏற்படுத்திவிடும். இவ்வளவு பெரிய பரப்பில் உத்தேசமாக 7,164 மரங்கள் வெட்டப்படும். இதுபோன்ற சிறந்த வனப்பகுதி அப்பகுதியில் அதிகம் இல்லை.
மேலும் அழிக்கப்படும் வனப்பகுதிக்கு மாற்றாக இன்னொரு வனப்பரப்பை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடமானது உகந்ததாக இல்லை. இத்தகைய காரணங்களை கருத்தில்கொண்டே அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக எப்.ஏ.சி. தெரிவித்துள்ளது.
இந்த அனுமதி மட்டும் கிடைக்கப்பட்டிருந்தால், இந்தியாவிலேயே ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். என்ற இரு உயர்கல்வி நிறுவனங்களை ஒருங்கே பெற்ற நகரம் என்ற பெருமை இந்தூருக்கு கிடைத்திருக்கும்.
