UPDATED : மார் 26, 2011 12:00 AM
ADDED : மார் 26, 2011 11:02 AM
தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும், வழிகாட்டி 2011 நிகழ்ச்சி, அவிநாசி ரோட்டிலுள்ள கொடிசியா வர்த்தக வளாகத்தில் நேற்று துவங்கியது; தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வழிகாட்டி நாளை நிறைவடைகிறது.
கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி பேசியதாவது: கடந்த ஆண்டு வழிகாட்டி நிகழ்ச்சியில் சொன்னதை போலவே, இந்தாண்டு ஐ.டி., நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை அதிகம். கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் சிக்கித் தவித்த நிலையில், ஐ.டி. துறை படிப்புக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இல்லை. மாறாக பயம் மட்டுமே இருந்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைக்கும், ஐ.டி.படிப்புக்கும் வேறுபாடு கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் குறிப்பிட்ட மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்கியது.
இத்துறையில் விரும்பி சேரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகமானதன் காரணமாகவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிலிருந்து தனியாக பிரித்து இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐ.டி.,) என்ற படிப்பு துவக்கப்பட்டது. இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகள் தவிர, தனியார் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.டி., நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
ஐ.டி.,துறையில் வேலைவாய்ப்பு பெறும் மாணவர்களில் மெக்கானிக்கல் பொறியியல் மாணவரை விட அதிக சம்பளம் கம்ப்யூட்டர் பொறியியல் மாணவருக்கு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்டவை கம்ப்யூட்டர் பொறியியல் மாணவருக்கே அதிகம் கிடைக்கும். கல்லூரியில் சேரும் முன் தாங்கள் விரும்பும் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள மாணவ, மாணவியரிடம் கல்லூரி கொண்டுள்ள வசதிகள், வேலைவாய்ப்புக்கு எந்த வகையான நிறுவனங்கள் வருகின்றன என்பது உள்ளிட்டவை குறித்து நன்றாக கேட்டு தெரிந்து கொண்ட பின்னரே அக்கல்லூரியில் சேர வேண்டும்.
கடல்சார் படிப்புகளுக்கு மதுரை, அருப்புக்கோட்டை ரோட்டிலுள்ள ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்சஸ் கல்லூரியில் சேரலாம். தகவல் தொடர்புத்துறை,தொலைத்தொடர்பு, மின் மற்றும் ஆற்றல் உற்பத்தித்துறை உள்ளிட்டவற்றிற்கு எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தொலைத் தொடர்புத்துறை வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்துறை மாணவ, மாணவியர் படிக்கும் காலத்தில் கல்லூரிகளில் நடக்கும் வளாக நேர்காணலில் பங்கேற்கும் போது அரியர் கொண்டிருக்காமல் இருந்தால், உடனடி வேலைவாய்ப்பு பெற முடியும்.
ஐ.டி., நிறுவனங்கள் போல் வேலைவாய்ப்பு இத்துறையினருக்கு இல்லை என்பதும், கிடைக்கும் வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்தினால் நல்ல சம்பளத்தில் வேலை பெறலாம் என்பதுமே காரணம். விடாமுயற்சி, கடின உழைப்புக்கு வெற்றி நிச்சயம். வாழ்வில் ஒருபோதும் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.
அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடவடிக்கை காரணமாக, இந்தாண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை மற்றும் கல்லூரிகளில் இடங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, அவசரப்பட்டு கல்லூரிகளில் சேர வேண்டாம். விரும்பும் கல்லூரிகளில் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. விடுமுறை நாட்களை, வீணடிக்காமல் கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு சென்றால் நல்லது. எதிர்வரும் நான்கு ஆண்டுகளில், ஐ.டி.,துறை வியக்கத்தக்க அளவு முன்னேற்றம் பெறும். கம்ப்யூட்டர்துறையில் சிறந்து வளங்கும் வகையில் மாணவ,மாணவியர் தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். "தினமலர்' நாளிதழின் இணையதளத்தில் கல்லூரிகள் குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்வதுடன், தங்களின் சந்தேகங்களுக்கும் தெளிவு பெறலாம். இவ்வாறு, ஜெயப்பிரகாஷ்காந்தி பேசினார். தொடர்ந்து, மாணவ,மாணவியருக்கு ஊக்கம் தரும் வகையில் குறும்படத்தை திரையிட்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கண்காட்சி அரங்கை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குனர் முத்து சுப்பிரமணியம் திறந்து வைத்தார். கோவை, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் இணைச் செயலாளர் பிரியா, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி, ஈஸ்வர் இன்ஜி., கல்லூரி செயலாளர் சுதா, ஜான்சன்ஸ் கல்லூரி முதல்வர் மோகன சுந்தரம், எஸ்.வி.எஸ்., கல்லூரி இயக்குனர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
