UPDATED : மார் 28, 2011 12:00 AM
ADDED : மார் 28, 2011 05:52 PM
ஐ.ஐ.டி.யில் சேர்வதற்காக மாணவர்களுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை சூப்பர் 30 நிறுவனர் ஆனந்த் குமார் வரவேற்றுள்ளார்.
ஐ.ஐ.டி. ஜே.இ.இ. எனப்படும் ஐ.ஐ.டி.யின் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில், விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். இதனை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
தேர்வு முடிந்த 48 மணி நேரத்தில், கேள்விக்கான சரியான விடைகள் அதே இணையதளத்தில் வெளியிடப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையாக தேர்வு நடத்தும் வகையில் இந்த மாற்றம் அமையும்.
கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கையும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபலையும் சந்தித்து ஆனந்த் குமார் விடுத்த கோரிக்கைகளில் ஒன்றான ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் மாற்றம் கொண்டு வரும் கோரிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனை, ஐ.ஐ.டி. தேர்வு எழுதும் பீகார் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை எடுக்கும் சூப்பர் 30 கல்வி மையத்தின் நிறுவனர் ஆனந்த் குமார் வரவேற்றுள்ளார்.
இதோடு, புறநகர்ப் பகுதிகளில் இருந்து தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேர்வெழுத மற்றொரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
