ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு விடைத்தாள்கள் இனி ஆன்லைனில்!
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு விடைத்தாள்கள் இனி ஆன்லைனில்!
UPDATED : ஏப் 07, 2011 12:00 AM
ADDED : ஏப் 07, 2011 01:22 PM
ஐ.ஐ.டி -களில் சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வை வெளிப்படை தன்மையுள்ளதாக ஆக்கி, தங்களின் உண்மை நிலையை மாணவர்கள் அறிந்துகொள்ளவும், தேர்வில் வெற்றிபெற, தங்களை இன்னும் எந்தளவிற்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் தெரிந்துகொள்வதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். ஏப்ரல் 10 ம் தேதி நடைபெறவுள்ள ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் சுமார் 4.85 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். தேர்வு முடிவுகள் மே மாதம் 25 ம் தேதி வெளியிடப்படுகின்றன.
இந்த புதிய நடைமுறையின் மூலம், விடைத்தாள்களை முறையாக திருத்துவது உறுதிபடுத்தப்படும். மேலும் மாணவர்கள் ஆன்லைனில் தங்களின் விடைத்தாளை பார்க்க அவர்களுக்கு தனி பாஸ்வேர்ட் தரப்படும். நுழைவுத்தேர்வு முடிந்து 2 நாட்களுக்குள் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடைகளை அறிவிக்க ஐ.ஐ.டி -கள் ஏற்பாடுகளை செய்துள்ளன.
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை இந்தாண்டு எழுதப்போகும் 4.85 லட்சம் மாணவர்களில் 28 சதவீதம் பெண்கள். இது கடந்தாண்டைவிட 4 சதவீதம் கூடுதல். இந்த வருட நுழைவுத்தேர்வானது, ஐ.ஐ.டி-கான்பூரால் நிர்வகிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 1051 மையங்களில் அந்த தேர்வு நடத்தப்படுகிறது.
