அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை; 12 முதல் 25 வயதிற்குட்பட்டோருக்கு அழைப்பு
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை; 12 முதல் 25 வயதிற்குட்பட்டோருக்கு அழைப்பு
UPDATED : மே 25, 2026 06:47 PM
ADDED : மே 25, 2026 06:48 PM
உடுமலை:
உடுமலை அரசு இசைப்பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவண மாணிக்கம் கூறியதாவது:
அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், உடுமலை அரசு இசைப்பள்ளியில், குரல் இசை, தேவாரம், மிருதங்கம், நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், வயலின் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
சிறந்த ஆசிரியர்களை கொண்டு, இசை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. இப்பாடப் பிரிவுகளில் சேர, 12 வயதுக்கு மேல், 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரல் இசை, பரதம், தேவாரம், வயலின் பிரிவுகளில் சேர, 7ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.
தவில், நாதசுரம் பிரிவுகளில் சேர கல்வித்தகுதி அவசியம் இல்லை; மூன்று ஆண்டுகளுக்கு பரதம் பயிற்சி அளிக்கப்படும். இசைப்பள்ளியில் சேரும் மாணவர்களுககு, இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகையாக, மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் தங்கும் விடுதி இலவசம்.
10, 11, 12 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெறாதவர்கள், ஐ.டி.ஐ., மற்றும் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை முடித்தவர்கள், தகுதி உள்ள மாணவர்கள், 25 வயதிற்குள் உள்ள மாணவர்கள் சேர்க்கப்படுவர். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி பெற்று, தேர்ச்சி சான்றிதழ் பெறும் போது, 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மூன்றாண்டு பயிற்சி பெற்று, தேர்ச்சி சான்றிதழ் பெறும் போது, 12ம் வகுப்புக்கு இணையான தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். மூன்றாண்டு பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றதும், தனியார் மற்றும் அரசு பணிகளில் வேலை வாய்ப்பு அவரவர் தகுதிக்கேற்ப கிடைக்க வாய்ப்புண்டு.
முற்றிலும் இலவச கல்வி வழங்கப்படுவதோடு, அரசால் இலவச இசைக்கருவிகள் வழங்கப்படுகிறது. இங்கு மூன்றாண்டு பயிற்சி பெற்று, மேலும் இசைக்கல்வி தொடர விரும்பினால், அரசு இசைக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கப்படுவர்.
படிப்பு முடித்தவுடன் அவரவர் திறமைக்கேற்ப, திரைத்துறையிலும், சின்னத்திரையிலும், இசையமைப்பாளராகவும், பாடகர்களாகவும், நடன கலைஞர்களாகவும் பணியில் சேரலாம்.
வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு உண்டு. இந்து சமய அறநிலையத்துறை கோவில்களிலும், தனியார் பள்ளிகளிலும் திறமைக்கேற்ப வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இசைப் பள்ளியில் சேர விரும்புவோர், தலைமை ஆசிரியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி, தளி ரோடு, நகராட்சி வளாகம், உடுமலை, என்ற முகவரிக்கு நேரில் வரலாம். மேலும் விபரங்களுக்கு, 95664 73769; 04252 227376 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கூறினார்.
