எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை 15 ஆண்டுக்கு பின் உயர்வு
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை 15 ஆண்டுக்கு பின் உயர்வு
UPDATED : செப் 17, 2026 10:06 AM
ADDED : செப் 17, 2026 10:09 AM

சென்னை:
'ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, 15 ஆண்டுகளுக்கு பின் உயர்த்தப்படுகிறது' என, சமூக நீதித் துறை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு, அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கல்விக் கட்டணம், உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு முதல், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில், அரசு அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது .
மேலும், கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது. உதாரணமாக, பி.ஏ., படிப்புக்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 1,350 ரூபாய், 11 ஆயிரத்து 250 ரூபாயாகவும்; எம்.ஏ., படிப்புக்கு 1,350 ரூபாய் என்பது, 12 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படுகின்றன.
மற்ற பாடப்பிரிவுகளுக்கும் கல்வி உதவித்தெகை உயர்த்தப்பட்டு உள்ளது. இத்தொகை 15 ஆண்டுகளுக்கு பின் உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை வழங்கப்படும் பாடப்பிரிவுகளின் பட்டியலில், புதிதாக 11 இளங்கலை படிப்புகள், 10 முதுகலை படிப்புகள், இரண்டு பட்டயப் படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கையால், இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
