தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு: நவ.,18 முதல் கலந்தாய்வு

மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு: நவ.,18 முதல் கலந்தாய்வு

மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு: நவ.,18 முதல் கலந்தாய்வு


UPDATED : நவ 17, 2020 12:00 AM

ADDED : நவ 17, 2020 08:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2020 12:00 AM ADDED : நவ 17, 2020 08:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வாயிலாக, 405 இடங்கள் பெற உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 26 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 3,650 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள்போக, 3,302 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு வருகின்றன.
15 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 2,100 எம்.பி.பி.எஸ்., இடங்களில், 1,147 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு வருகின்றன. அதேபோல, இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 194 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு போக, 165 இடங்களும், ௧8 தனியார் பல் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 1,760 இடங்களில், 1,065 இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு வருகின்றன.

விண்ணப்பம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ௭.௫ சதவீத இட ஒதுக்கீடு வழங்க, கவர்னர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கின. அரசு மருத்துவ இடங்களுக்கு, 24 ஆயிரத்து, 712 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 23 ஆயிரத்து, 707 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 972 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 951 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, 14 ஆயிரத்து, 511 விண்ணப்பங்களில், 14 ஆயிரத்து, 276 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைபட்டியலை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டனர். அப்போது, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

முதலிடம் யாருக்கு?

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில், 'நீட்' தேர்வில், 710 மதிப்பெண்கள் எடுத்து, திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலை சேர்ந்த ஆர்.ஸ்ரீஜன், அகில இந்திய அளவில், 8வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்றார்.நாமக்கலை சேர்ந்த மோகனபிரியா ரவிச்சந்திரன், 705 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடம்; சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த சுவேதா, 701 மதிப்பெண்களுடன், மூன்றாவது இடமும் பிடித்தனர்.
நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில், ஷமீல் கல்லாடி, 700 மதிப்பெண்களுடன் முதலிடம்; அம்மு மரியம் அனில், 695 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம்; ஜெய் முரேகர், 691 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தரவரிசை பட்டியலை வெளியிட்ட, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மாணவர் சேர்க்கை, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், திறந்த வெளியில் நடைபெறுகிறது. நாளை சிறப்பு பிரிவினருக்கும், நாளை மறுநாள், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறும்.
அதன்பின், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும். தினமும், 500 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். மாணவருடன் ஒருவர் மட்டுமே வரலாம். எந்த தேதி, நேரத்தில் கவுன்சிலிங்கிற்கு வர வேண்டும் என, அவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுச்செய்தி அனுப்பப்படும். மாணவர்களின் பள்ளி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சரி பார்க்க, 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கவுன்சிலிங் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us