பி.எம்., இன்டர்ன்ஷிப் திட்டம் வரும் 2ல் முறைப்படி துவக்கம்
பி.எம்., இன்டர்ன்ஷிப் திட்டம் வரும் 2ல் முறைப்படி துவக்கம்
UPDATED : நவ 29, 2024 12:00 AM
ADDED : நவ 29, 2024 05:24 PM

புதுடில்லி:
பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம், முறைப்படி டிசம்பர், 2ம் தேதி துவக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளைஞர்களின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கில், நேரடியாக முன்னணி நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பெறக்கூடிய வகையில், பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம் கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது.
நாட்டின் முன்னணி, 500 நிறுவனங்கள் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1 கோடி இளைஞர்களுக்கு நேரடி பணிப்பயிற்சி கிடைக்கச் செய்ய, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பயிற்சியில் சேரும், 21 - 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க, கடந்த பட்ஜெட்டில், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் மாதம், 4,500 ரூபாயும், நிறுவனத்தின் சார்பில், 500 ரூபாயும் சேர்த்து 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
நிறுவனங்கள் தங்களது சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூக பொறுப்பு நிதியில் இருந்து உதவித்தொகை வழங்க அரசு அனுமதித்துள்ளது. இந்த திட்டத்துக்கான அரசின் இணைய தளத்தில் இதுவரை, 6.21 லட்சம் இளைஞர்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
நிறுவனங்கள் தரப்பில், 1.27 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டம், வரும் 2ம் தேதி முறைப்படி துவங்க உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.