திருவள்ளூர், காஞ்சி, செங்கையில் பிளஸ் 2 தேர்வில் அபாரம்
திருவள்ளூர், காஞ்சி, செங்கையில் பிளஸ் 2 தேர்வில் அபாரம்
UPDATED : மே 10, 2026 09:41 PM
ADDED : மே 10, 2026 09:48 PM

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில் மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளனர். கடந்தாண்டை விட நடப்பாண்டு தேர்ச்சி சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் 249 பள்ளிகளில், 13,586 மாணவர்கள், 15,116 மாணவியர் என, மொத்தம் 28,702 பேர், 117 தேர்வு மையங்களில், கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில், 12,500 மாணவர்கள், 14,512 மாணவியர் என, மொத்தம் 27,012 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.11 சதவீதம். இது, கடந்தாண்டு பெற்ற 91.49 சதவீதத்தை விட, 2.62 சதவீதம் அதிகம். கடந்தாண்டு மாநில அளவில், 36வது இடத்தை பிடித்த திருவள்ளூர் மாவட்டம், தற்போது, 27வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6,664 மாணவர்கள், 7,368 மாணவியர் என, 14,032 பேர் தேர்வெழுதினர். இதில், 13,374 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 95.31 சதவீதம். கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 93.27ஆக இருந்தது. நடப்பாண்டில் 2.04 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், 93.4 ஆக பதிவாகியுள்ளது. கடந்தாண்டு 89.71 ஆக பதிவாகியிருந்தது. அரசு பள்ளி தேர்ச்சி சதவீதம் 3.69 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆறு அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது, கல்வி துறையினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில் 11 பாட பிரிவுகளில், 239 மாணவ மாணவியர் சென்டம் எடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 13,737 மாணவர்கள், 15,458 மாணவியர் என, 29,195 பேர் தேர்வெழுதினர். இதில், 27,223 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.25 சதவீதம். மாநில அளவில் 31வது இடமும், 81 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டு, 94.29 தேர்ச்சி சதவீதமும், மாநில அளவில் 28வது இடமும் பெற்றது.
இந்த தேர்வில் 12,429 மாணவர்கள், 14,794 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 90.48 சதவீதம், மாணவியர் 95.70 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
அரசு, நகராட்சி மற்றும் நலத்துறை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 12,240 பேரில், 10,748 பேர் தேர்ச்சி பெற்று, 87.81 சதவீதம் பெற்றனர்.
